ஜபல்பூர்: ஜபல்பூர் படகு விபத்து தொடர்பாக படகோட்டிகள் மற்றும் உரிமையாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நர்மதா ஆற்றின் பேடாகாட் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 13 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த விசாரணையில், 20 பேர் மட்டுமே செல்ல வேண்டிய படகில் 35க்கும் மேற்பட்டோர் ஏற்றப்பட்டதும், அதில் வெறும் 10 பாதுகாப்பு ஜாக்கெட் மட்டுமே இருந்ததும் தெரியவந்தது.
மேலும், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு படகை இயக்கக்கூடாது என்ற விதியை மீறி சட்டவிரோதமாக படகு இயக்கப்பட்டது விசாரணையில் அம்பலமானது. படகு மூழ்கியபோது, பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்திருந்த மற்றும் நீச்சல் தெரிந்த படகோட்டிகள், குழந்தைகளையும் குடும்பங்களையும் காப்பாற்ற முயற்சிக்காமல் தங்களை மட்டும் காப்பாற்றிக்கொண்டு தப்பியோடியது சாட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக நீதித்துறை நடுவர் டி.பி.சூத்திரகர் உத்தரவின் பேரில், ஜபல்பூர் போலீசார் படகு நிறுவன உரிமையாளர்கள் மற்றும் படகோட்டிகள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே சாதாரண கவனக்குறைவு பிரிவின் கீழ் இருந்த வழக்கை, தற்போது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 105ன் கீழ் ‘கொலைக்கு நிகரான குற்றமாக’ நீதிமன்றம் மாற்றியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, ‘படகோட்டிகள் தங்களை மட்டும் காப்பாற்றிக் கொண்டதுடன், மற்றவர்களை காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யாதது திட்டமிட்ட கொலை முயற்சிக்கு சமம்’ என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்தைத் தொடர்ந்து, ஜபல்பூர் முழுவதும் உள்ள சுற்றுலாப் படகுகளின் பாதுகாப்பு குறித்து தணிக்கை செய்ய மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. பிரேத பரிசோதனை மற்றும் படகு தகுதிச் சான்றிதழ் வழங்கியதில் உள்ள குளறுபடிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
