பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தக்கோரி தலைமை செயலாளருக்கு ஒன்றிய அரசு கடிதம்!!

தமிழ்நாட்டில் அமைய உள்ள புதிய அரசை நிர்பந்திக்கும் வகையில் இருமுறை கொள்கைக்கு எதிராக பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையுமாறு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக பிஎம் ஸ்ரீ என்னும் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிராக மும்மொழி கொள்கையை மறைமுகமாகத் திணிக்கும் நோக்கம் கொண்டது என கூறி இத்திட்டத்தை திமுக அரசு எதிர்த்து வந்தது. மேலும் பொதுப் பட்டியலில் கல்வி உள்ளதால், ஒன்றிய அரசின் திட்டத்தை ஏற்க நிர்பந்திப்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது என திமுக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேரத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மறுத்து வந்ததால், சுமார் ரூ.2,151 கோடி நிதி தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதைபோல் மேற்குவங்க மாநில அரசும் பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாநில அரசின் 40% சதவீதம் நிதிப் பங்களிப்பு இருந்தும், திட்டத்தின் பெயரில் “பிரதான் மந்திரி” என்ற ஒன்றிய அரசின் முத்திரை இருப்பதாக மேற்குவங்க முதலவர் மம்தா பானர்ஜி விமர்சித்தார். இந்தநிலையில், தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுமாறு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமைய உள்ள புதிய அரசை நிர்பந்திக்கும் வகையில் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையுமாறு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: