என்ஆர்.காங். சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு 5வது முறை முதல்வராக ரங்கசாமி பதவியேற்கிறார்: பாஜவுக்கு ஒரு அமைச்சர் மட்டுமே வழங்க முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ஆளும் தேஜ கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் 12, பாஜ 4, அதிமுக 1, லஜக 1 என 18 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் வெற்றிபெற்ற 12 என்ஆர்.காங். எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைவரான முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.

இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில், முதல்வர் ரங்கசாமியை என்ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்தனர். இதற்கான கடிதத்தில் எம்எல்ஏக்கள் கையொப்பமிட்டனர். இந்த கூட்டத்தில், பாஜவுக்கு ஒரு அமைச்சர் பதவி மட்டுமே வழங்க வேண்டும் என்று எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த முறை பாஜவுக்கு 2 அமைச்சர், ஒரு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாஜ எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஒன்றிய அமைச்சரும், பாஜ தேர்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா, பாஜ மாநில பொறுப்பாளர்கள் நிர்மல் குமார் சுரானா, தசரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பாஜ சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக வெற்றிபெற்ற நமச்சிவாயம், ஜான்குமார், ஜி.என்.எஸ்.ராஜசேகரன், மீனாட்சி சுந்தரம் மற்றும் எல்ஜேக தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், நெடுங்காடு தொகுதி சுயேச்சை எம்எல்ஏ விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பாஜ சட்டமன்ற தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். மேலும், தேஜ கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜ தேர்தல் பொறுப்பாளர்கள் விரைவில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளனர்.

* பதவி ஏற்பு எப்போது?
வருகிற 16ம் தேதி அமாவாசை. அதன்பிறகு கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார். முதலில் அவர் பதவி ஏற்றுகொண்ட பிறகு யார் யாருக்கு அமைச்சர் பதவி தருவது என்பதை அப்பா பைத்தியம் சுவாமி மற்றும் அழுக்கு சாமி ஆசியோடு இறுதி செய்வார் என்றும், அதன்பிறகே அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் என்ஆர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, முதல்வர் பதவியேற்பு விழா தள்ளி போகிறது. இதற்கிடையே ரங்கசாமி 5வது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ளதால், அவரை என்ஆர் காங்., எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: