புதுடெல்லி: மின்னணு போர் அமைப்புகளை வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சகத்துடன் ரூ.1476 கோடியிலான ஒப்பந்தத்தில் பெல்(பிஇஎல்) நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு 5 நகரும் மின்னணு அமைப்புகளை (ஜிபிஎம்இஎஸ்) தயாரித்து பெல் நிறுவனம் வழங்கும். இந்த மின்னணு அமைப்புகளில் குறைந்தபட்சம் 72% உள்நாட்டு தயாரிப்புகளே இடம் பெற்றிருக்கும்.
ஒன்றிய பாதுகாப்பு துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்தத் திட்டம் நேற்று கையெழுத்திடப்பட்டது. நகரும் மின்னணு அமைப்பானது, அனைத்து வகையான ரேடார்களையும் கண்டறிந்து, வகைப்படுத்தி, அவற்றின் இருப்பிடத்தைக் கண்டறியும் திறன் கொண்ட உளவு போர் அமைப்பு ஆகும் என பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
