102 தொகுதிகளில் காங். கூட்டணி வெற்றி கேரளாவின் புதிய முதல்வர் யார்? முட்டி மோதும் மூத்த தலைவர்கள்: டெல்லி விரைந்தார் கே.சி.வேணுகோபால்

திருவனந்தபுரம்: கேரளாவில் 10 வருட இடைவெளிக்குப் பின்னர் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளில் இந்தக் கூட்டணி 102 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இடதுசாரி கூட்டணிக்கு இம்முறை வெறும் 35 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பாஜ கூட்டணி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி இருக்கும் என்று தேர்தலுக்கு முன்பே கூறப்பட்டது.

மூத்த தலைவர்களான ரமேஷ் சென்னித்தலா, கே. சுதாகரன், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், கே.சி. வேணுகோபால் எம்.பி. ஆகியோர் முதல்வர் பதவி மீது குறி வைத்திருந்தனர். இந்தத் தேர்தலில் எம்பிக்கள் யாரும் போட்டியிடக் கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்திருந்த போதிலும், தான் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று சுதாகரன் கூறினார். சுதாகரனுக்கு வாய்ப்பு கிடைத்தால் அந்த சாக்கில் தானும் போட்டியிட்டு முதல்வர் பதவிக்கு குறிவைக்க கே.சி.வேணுகோபால் திட்டமிட்டார்.

இதற்கிடையே ரமேஷ் சென்னித்தலாவும், சதீசனும் முதல்வர் பதவிக்கு குறிவைத்து காய்களை நகர்த்தத் தொடங்கினர். இந்தநிலையில் எம்பிக்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்க காங்கிரஸ் மேலிடம் மறுத்ததை தொடர்ந்து சுதாகரன், கே.சி. வேணுகோபாலின் கனவு தகர்ந்தது. ஆனாலும் முதல்வர் ஆசையை வேணுகோபால் இதுவரை கைவிடவில்லை. அதேநேரத்தில் சதீசனும், ரமேஷ் சென்னித்தலாவும் முதல்வர் நாற்காலியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

இதற்காக இருவரும் தங்களது ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். பொதுவாக காங்கிரஸ் கட்சியில் டெல்லியில் இருந்து வரும் மேலிடக் குழுவினர் எம்எல்ஏக்களுடன் கலந்து பேசி ஒரு முடிவை எடுப்பார்கள். இதன் பிறகு முடிவெடுக்கும் பொறுப்பு மாநில தலைவரிடம் ஒப்படைக்கப்படும். இந்த நடைமுறைகளுக்குப் பின்னரே முதல்வர் யார்? என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

* பலமும், பலவீனமும்
முதல்வர் ரேசில் உள்ள 3 பேருக்கும் பலமும், பலவீனங்களும் உள்ளன. கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் தோல்வியடைந்த நிலையில் தான் எதிர்க்கட்சித் தலைவராக சதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதன் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 18ல் வெற்றி பெற்றது. இதன் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இவை அனைத்தும் சதீசனுக்கு பலமாக உள்ள போதிலும் சமுதாய தலைவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவது, தலைக்கனம் பிடித்தவர் என்ற பேச்சு அடிபடுவது ஆகியவை இவருக்கு பலவீனமாக உள்ளது. ரமேஷ் சென்னித்தலா 26 வயதில் எம்எல்ஏ ஆகி, 30 வயதில் அமைச்சர் ஆனவர். கேரளாவில் உள்துறை அமைச்சராக இருந்த இவர், நீண்ட காலம் எம்பியாகவும் பணியாற்றினார். ரமேஷ் சென்னித்தலாவுடன் நெருக்கமான பல தேசிய காங்கிரஸ் தலைவர்கள் முதல்வர்கள் ஆகிவிட்டனர்.

இவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கு, மது பார் ஊழல் வழக்கு ஆகியவை அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. முதல்வர் ரேசில் அடுத்த இடத்தில் உள்ள கே.சி. வேணுகோபால், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்.

இது இவருக்கு ஒரு பலமாக உள்ள போதிலும் தற்போது எம்பியாக உள்ள யாருக்கும் தேர்தலில் சீட் கொடுக்காத நிலையில் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுத்தால் அது காங்கிரஸ் கட்சியில் கடும் பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.இந்த நிலையில் ராகுல்காந்தியிடம் ஆலோசனை நடத்துவதற்காக கே.சி வேணுகோபால் நேற்று ெடல்லி விரைந்துள்ளார்.

Related Stories: