கட்சி தாவிய 6 எம்பிக்களின் பதவியை ரத்து செய்ய வேண்டும்: குடியரசு தலைவரிடம் பஞ்சாப் முதல்வர் மனு

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் கட்சி தாவிய 6 எம்பிக்களின் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் பகவந்த் மான் குடியரசு தலைவரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். கடந்த மாதம் 24ம் தேதி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்பிக்கள் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தனர். ஆம் ஆத்மியில் இருந்து விலகிய 7 எம்பிக்களில் 6 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். அப்போது மாநிலத்தை சேர்ந்த கட்சி தாவிய 6 எம்பிக்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 6 எம்பிக்களையும் பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஆவணங்களையும் முதல்வர் குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்தார்.

* பாஜவில் இணைந்த எம்பிக்கள் துன்புறுத்தல்
ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜவில் இணைந்த எம்பியான ராகவ் சதா கூறுகையில், ‘‘ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசானது பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகின்றது. சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்த எம்பிக்களை குறிவைப்பதற்கு அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் ராகவ் சதா மற்றும் அவருடன் மூன்று எம்பிக்கள் சேர்ந்து குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆம் ஆத்மியில் இருந்து விலகியதை தொடர்ந்து எங்கள் மீது துன்புறுத்தல்களும், அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறி மனு அளித்தனர்.

Related Stories: