கனமழை கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

ஊட்டி, மே 5: ஊட்டியில் நேற்று இரவு கனமழை கொட்டியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவ மழை பெய்யும். அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவ மழை பெய்யும்.  மார்ச் மாதத்தில் ஒரு சில தினங்கள் கோடை மழை பெய்யும். அதேபோல் ஏப்ரல் மாதத்திலும் ஒரு சில தினங்கள் கோடை மழை பெய்யும்.

ஆனால் இம்முறை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் எதிர்பார்த்த அளவிற்கு கோடை மழை பெய்யாத நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மே மாதம் 4 மற்றும் ஐந்தாம் தேதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கு ஏற்றார் போல் நேற்று காலை முதல் ஊட்டியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு சுமார் 8 மணி முதல் மழை பெய்ய துவங்கியது. மேலும் புறநகர் பகுதிகளிலும் இந்த மழை தொடர்ந்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இந்த மழை நீடித்தது. இதனால் ஊட்டியில் நிலவி வந்த வெப்பமான காலநிலை சற்று குறைந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது. தற்போது ஊட்டியில் மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் ஊட்டி வந்துள்ள சுற்றுலா பயணிகளுக்கு இந்த குழு குழு காலநிலை உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் காட்டுத்தீ ஏற்பட்டு வரும் நிலையில் இந்த மழை தொடர்ந்தால் காட்டுத் தீயும் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு உயர வாய்ப்புள்ளது.

 

Related Stories: