கோடை சீசனுக்கு தயாராகும் ஊட்டி ரோஜா பூங்கா

ஊட்டி, ஏப்.30: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். ஊட்டியில் நிலவும் மிதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  குறிப்பாக, கோடை சீசன் சமயத்தில் தேர்வு விடுமுறைகளை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏப்ரல், மே மாத துவக்கத்தில் ஊட்டிக்கு அதிகளவில் வருவார்கள்.

அவர்களை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிக்கள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு கோடை சீசனுக்காக மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டு கோடை சீசன் துவங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

இந்த சமயத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் ஊட்டி ரோஜா பூங்கா தயாராகி வருகிறது. ஏற்கனவே, கடந்த ஜனவரியில் கவாத்து செய்யப்பட்ட செடிகள் நன்கு வளர்ந்து தற்போது பல்வேறு வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதன் தொடர்ச்சியாக பூங்கா சரிவுகளில் பல்வேறு வகையான மலர் நாற்றுகளை கொண்டு பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கும் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Related Stories: