தகாத உறவை கண்டித்த கணவர் கண்மாய் நீரில் மூழ்கடித்து கொலை: கள்ளக்காதலனுடன் மனைவி சிக்கினார்

அருப்புக்கோட்டை: கள்ளக்காதலை கண்டித்த கணவரை, கண்மாய் நீரில் மூழ்கடித்து கொன்றது தொடர்பாக மனைவி, அவரது காதலனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள வெள்ளைக்கோட்டை வடம்போக்கி தெருவைச் சேர்ந்தவர் சரவணப்பெருமாள் (47), பந்தல் அமைப்பாளர். இவரது மனைவி தில்லையம்மாள் (43). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே மில்லில் பணிபுரியும் ஸ்ரீரங்கம் (45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் அரசல்புரசலாக பேசவே, சரவணப் பெருமாள், மனைவியை கண்டித்துள்ளார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கணவர் உயிருடன் இருக்கும் வரை கள்ளக்காதலை தொடர முடியாது என நினைத்த தில்லையம்மாள், ரங்கத்துடன் சேர்ந்து, அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதன்படி, நேற்று காலை மதுபோதையில் இருந்த கணவரை, தில்லையம்மாள் நைசாக பேசி, அருப்புக்கோட்டை காந்திநகர் புறவழிச்சாலை சாய்பாபா கோயில் எதிரே உள்ள பாப்பன்குளம் கண்மாய் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தயாராக இருந்த கள்ளக்காதலன் ரங்கம் மற்றும் தில்லையம்மாள் சேர்ந்து போதையில் இருந்த சரவணப்பெருமாளை கண்மாய் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தனர். பின்னர் ஒன்றும் தெரியாதது போல அவரவர் வீட்டுக்குச் சென்றனர். இந்த நிலையில், நேற்று மதியம் சரவணப்பெருமாளின் உடல் கண்மாய் நீரில் மிதந்தது.

இது குறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரவணப்பெருமாளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சரவணப்பெருமாளின் அண்ணன் சத்திரபதி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தில்லையம்மாள், ரங்கத்தை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து தில்லையம்மாள் கணவரை கொன்றது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: