மாம்பழம் விற்கும் மூதாட்டியிடம் போலி 500 ரூபாய் கொடுத்து ஏமாற்றிய பெண்: கண்ணீர்விட்டு கதறும் வீடியோ வைரல்

திருவொற்றியூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (70). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள கடந்த பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் கடை வைத்து சீசனுக்கு ஏற்றார்போல் பழ வியாபாரம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.

தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் வழக்கம்போல் மாம்பழங்களை மொத்தமாக வாங்கி வந்து திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் விற்பனை செய்துவருகிறார். இந்தநிலையில் நேற்று மாம்பழம் விற்பனை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த பெண், சிறுவர்கள் விளையாடும் டம்மி 500 ரூபாயை கொடுத்து ரூ.150க்கு மாம்பழம் வாங்கிவிட்டு மீதி பணத்தை வாங்கி சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து பையில் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டை எடுத்து பார்த்தபோது மூதாட்டி ஜெயலட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உடனே ரூபாய் நோட்டை அருகில் இருந்த வியாபாரிகளிடம் காட்டி கேட்டபோது, போலியான 500 ரூபாய் என்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி மிகுந்த மன வருத்தத்தில் கண்ணீர்விட்டார். நோயுடன் போராடிகொண்டிருக்கும் ஜெயலட்சுமி, தன்னந்தனியாக பழ வியாபாரம் செய்து மருத்துவ செலவுக்கே வியா பாரத்தில் கிடைக்கும் முழுவதும் செலவாகிவிடும் நிலையில் போலி 500 ரூபாய் கொடுத்து ஏமாற்றியதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த சம்பவம் பார்த்தவர்களை பரிதாபப்பட வைத்தது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலி 500 ரூபாய் நோட்டை கொடுத்து மூதாட்டியை ஏமாற்றி மாம்பழம் வாங்கி சென்ற பெண் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி திருவொற்றியூர் போலீசார் குறிப்பிட்ட நேரத்தில் மூதாட்டியிடம் மாம்பழம் வாங்கி சென்ற பெண் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் போலி 500 ரூபாய் நோட்டு மற்றும் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: