புதுச்சேரியை உலுக்கிய சம்பவம் பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் குற்றவாளி: போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; தண்டனை விவரம் மே 5ம் தேதி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் குற்றவாளி என பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ள புதுவை போக்சோ நீதிமன்றம், தண்டனை விவரத்தை மே 5ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது. புதுச்சேரி நகர பகுதியைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி கடந்த 2024 மார்ச் 2ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மாயமான நிலையில் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தீவிரமாக தேடினர். இதனிடையே 3 நாட்களுக்குபின் (5ம் தேதி) அதே பகுதியிலுள்ள ஒரு வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த காக்கா (எ) கர்ணாஸ் (20) என்ற இளைஞருடன் சிறுமி கடைசியாக காணப்பட்டதாக தகவல் கிடைத்தது. மறுநாள் கர்ணாஸ் மற்றும் அவரது கூட்டாளியான விவேகானந்தன் (56) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டன.

இதுதொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன், கடந்த 2024 செப்டம்பர் 16ம் தேதி அதிகாலை சிறை கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. இவ்வழக்கில் கடந்த 15ம் தேதி இறுதிக்கட்ட வாதங்கள் முடிவடைந்தது. சிறுமி மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான கூட்டுப் பாலியல் வன்புணர்வைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென வழக்கறிஞர் பிரவீன் வாதத்தை முன்வைத்தார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர், சுமார் 48 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வமான வாதத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் இந்த வழக்கில் சம்பந்தப்படுவதற்கு வழிவகுத்த ‘கடுமையாக்கும் சூழ்நிலைகளை’ பட்டியலிட்டிருந்தார். மேலும் அந்தக் குற்றம் மிகவும் கொடூரமான சூழலில் இழைக்கப்பட்டதாகவும் வாதிட்டிருந்தார். இறப்பதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர் சித்ரவதை செய்யப்பட்ட விதம். குற்றத்திற்கான நோக்கம், குற்றம் சாட்டப்பட்டவரின் சீர்கெட்ட மற்றும் வேட்டையாடும் இயல்பே ஆகும். குற்றத்தின் தன்மை மிகப்பெரியது. மேலும் இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு மனசாட்சியை உலுக்கியுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை குற்றம் சாட்டப்பட்டவரின் மிருகத்தனமான நடத்தையை உறுதிப்படுத்துகிறது. மேலும் இந்த வழக்கு அரிதிலும் அரிதான குற்றங்களின் வரம்பிற்குள் வருகிறது. எனவே, நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென முறையிட்டிருந்தார். இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பை ஏப்ரல் 30ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்திருந்தார். அதன்படி, நேற்று தீர்ப்புக்காக காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாஸ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

மதியம் 12 மணியளவில் நீதிபதி சுமதி, சிறுமி பாலியல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் கருணாஸ் குற்றவாளி என்றும் அவருக்கான தண்டனை விவரம் வருகிற 5ம் தேதி வழங்கப்படும் என்றும் தீர்ப்பளித்தார். இதையடுத்து கருணாஸ் மீண்டும் பலத்த பாதுகாப்புடன், காலாப்பட்டு மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்க வேண்டுமென மகளிர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: