புதுச்சேரி: புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே குளத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்த சேலம் லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (37). லாரி டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர் கடந்த 28ம்தேதி புதுச்சேரி பண்டசோழநல்லூரில் உள்ள தனியார் பெயிண்ட் கம்பெனிக்கு லாரியில் மூலப்பொருட்கள் ஏற்றி வந்த நிலையில் மறுநாள் கம்பெனி எதிரிலுள்ள குளத்தில், ரத்தக் காயங்களுடன் பிணமாக மிதந்தார். தகவலறிந்த போலீசார் செல்வத்தின் சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வம் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கம்பெனியில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் டிரைவர் செல்வத்தை 3 வாலிபர்கள் தாக்கியது பதிவாகியிருந்த நிலையில் அவர்களை அடையாளம் கண்டனர்.
அதன்படி பண்டசோழநல்லுார் குளத்து மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஆதித்யன் (24), ஹரிஷ் (19), சூர்யா (24) ஆகிய 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது குளத்துமேட்டு பகுதியில் மதுகுடித்த கொண்டிருந்தபோது அங்கு வந்த டிரைவர் செல்வம் அசிங்கமாக பேசியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், போதையில் இருந்த 3 பேரும் சரமாரியாக அவரை அடித்துக் கொலை செய்ததும், பின்னர் கொலையை மறைக்கும் வகையில் குளத்தில் சடலத்தை வீசிவிட்டு சென்றதையும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து 3 பேர் மீதும் கொலை வழக்குபதிந்து கைது செய்த போலீசார், அனைவரையும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
