நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அருந்தவபுலம் பகுதியில் கடந்த 22ம்தேதி பறக்கும்படை அலுவலர் ரமேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடேசன் உள்ளிட்ட பறக்கும்படை குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி நடத்திய சோதனையில் காரில் 240 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. பறக்கும் படையினர், 20 மதுபாட்டில்கள் மட்டும் கைப்பற்றப்பட்டதாக ஆவணங்களில் பதிவு செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் மீதமுள்ள மதுபாட்டில்களை வெளிநபர்களிடம் விற்பனை செய்ததாக தகவல் தெரிய வந்தது. இந்த தகவல் நாகப்பட்டினம் எஸ்பி சுஜித் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தலைமை காவலர் வெங்கடேசனிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
விசாரணையில், 240 மதுபாட்டில்கள் கடத்தி வந்த நிலையில் 20 மதுபாட்டில்கள் மட்டும் கைப்பற்றியதாக ஆவணம் தயார் செய்ததும், இதை மறைப்பதற்காக மதுபாட்டில் கடத்தி வந்தவரிடம் ரூ.30,000 லஞ்சம் பெற்றதும் தெரியவந்தது. எஸ்பி உத்தரவின் பேரில் பறக்கும்படை அலுவலர் ரமேஷிடம் வேதாரண்யம் சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலர் கண்ணன் நடத்திய விசாரணையில் ரமேஷ், வெங்கடேசனுடன் இணைந்து மதுபாட்டில்களை மறைத்ததும், மதுபாட்டில்கள் கடத்தியவரிடம் ரூ.30,000 லஞ்சம் பெற்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக பறக்கும் படை அலுவலர் ரமேஷை சஸ்பெண்ட் செய்ய, மாவட்ட கலெக்டருக்கு தேர்தல் அலுவலர் பரிந்துரை செய்தார். அதன்பேரில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ரமேஷை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார். இதே போல் ஏட்டு வெங்கடேசனை சஸ்பெண்ட் செய்து எஸ்பி சுஜித் உத்தரவிட்டார்.
