போச்சம்பள்ளி பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை பணி தீவிரம்

*கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் 2ம் போக நெல் அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையம், உலர் களங்கள் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று பாசனம் மூலம் நேரடியாக 26 ஆயிரத்து 924 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கால்வாய் இணைப்புகள் மூலம், 25 ஆயிரம் ஏக்கர் மூலம் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆறு பாய்ந்தோடும் காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடம், நெடுங்கல், கொட்டாவூர், அகரம், பண்ணந்தூர், அரசம்பட்டி, மஞ்சமேடு, பாரூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நீர் மற்றும் பாரூர் பெரிய ஏரி, பெணுகொண்டாபுரம் பெரிய ஏரிகளின் நீர் பாசன வசதியை நம்பி 2ம் போக நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல் அறுவடை நேரத்தில் ஆட்கள் பற்றாகுறை மற்றும் வியாபாரிகள் நெல்களை அடி மாட்டு விலைக்கு வாங்கி செல்வதால், விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், நெல் அறுவடைக்கு ஆட்கள் வராத நிலையில் திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்து நெல் அறுவடை செய்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில் மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், போதிய கூலி ஆட்கள் கிடைக்காததால், இயந்திரம் மூலம் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் நெல் அறுவடை பணிக்கான ஆட்கள் பற்றாக்குறை, பூச்சி தாக்குதலால் பராமரிப்பு செலவு உள்ளிட்டவையால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அணை பகுதி பாசன விவசாய சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், `அணையின் கீழ் 18 ஊராட்சிகளில் 9 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது 2ம் போக நெல் சாகுபடி நல்ல விளைச்சலை தந்துள்ளது.

இதனால் ஏக்கருக்கு சுமார் 30 மூட்டையில் இருந்து 40 மூட்டைகள் வரை நெல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அறுவடை செய்யப்படும் நெல் இடைத்தரகர்கள் மூலம் தனியாருக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் கிடைப்பதில்லை.

மேலும், பூச்சி மருந்துகளின் விலை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. இதனால் நெல் குவிண்டாலுக்கு ரூ.3500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், காவேரிப்பட்டணத்தில் நெல் கொள்முதல் அமைத்து, போதிய உலர்களங்களை ஏற்படுத்தி தர வேண்டும்,’ என்றார்.

இந்நிலையில், போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால், வெளிமாவட்டத்தில் இருந்து அதிக கூலி கொடுத்து ஆட்களை அழைத்து வந்து, நெல் அறுவடை செய்து வருகிறார்கள். சில விவசாயிகள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன், நெல் அறுவடை செய்கின்றனர்.

இயந்திரம் மூலமும் நெல் அறுவடை நடந்து வருவதால் அறுவடை இயந்திரத்திற்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஏக்கருக்கு 2 மூட்டைகள் நெல் நாசமாகி வருகிறது. வேறு வழியின்றி அறுவடை செய்து வருகிறோம் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: