முக்காணி தாமிரபரணி ஆறு உயர்மட்ட புதிய பாலம் சீரமைக்கும் பணி தீவிரம்

*விரைந்து முடிக்க கோரிக்கை

ஆறுமுகநேரி : தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலம், தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை போக்குவரத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

விசேஷ நாட்களில் திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியாக கடந்து செல்வது வழக்கம். இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் மழை, வெள்ளக் காலங்களில் முக்காணி தாமிரபரணி ஆற்றின் பழைய பாலத்தின் மேல் வெள்ளநீர் செல்லும்போது போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதையடுத்து முக்காணி தாமிரபரணி ஆற்றில் உயர்மட்ட புதிய பாலம், கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டு 2014ம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போது இந்த புதிய உயர்மட்ட பாலம், மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் இருந்தது.

கடந்த 2023ம் ஆண்டு டிச.17, 18, 19 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் முக்காணி தாமிரபரணி ஆற்றின் பழைய பாலம் முற்றிலும் மூழ்கியதுடன் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் பல்வேறு சாலைகள் சேதமடைந்து உருக்குலைந்தது.

மேலும் முக்காணி தாமிரபரணி ஆற்றின் புதிய உயர்மட்ட பாலத்தின் நடுப்பகுதி உறுதித்தன்மையை இழந்து 2 அடி ஆழத்திற்கு ஆற்றுக்குள் இறங்கி சேதமடைந்தது. உடனடியாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வாகனங்கள் உயர்மட்ட பாலத்தின் வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் ஆற்றின் பழைய பாலத்தின் வழியாக வாகனங்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டு தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது தேசிய நெடுஞ்சாலை துறையின் கீழ் உள்ள புதிய உயர்மட்ட பாலத்தை சீரமைக்கக் கோரி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினர், கட்சியினர், சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தி கோரிக்கை மனு அளித்தனர். நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் சென்னை ஐஐடி துறை வல்லுநர்கள், முக்காணி தாமிரபரணி ஆற்றின் உயர்மட்ட பாலத்தை எவ்வாறு சீரமைப்பது என ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் தேசிய நெடுஞ்சாலை துறை பராமரிப்பு பணியின் கீழ் முக்காணி தாமிரபரணி ஆற்றின் புதிய பாலத்தை ரூ.4.77 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது பணியை ஆரம்பித்து முடிப்பதற்கு ரூ.4.77 கோடி தேசிய சாலை பராமரிப்பு பணியின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகளானது 9 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் ஒப்புதல் வழங்கப்பபட்டுள்ளது. இருப்பினும் அதிக பணியாளர்களையும் ஹை டெக் இயந்திரங்களை கொண்டு 3 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும், என்றனர்.

இதற்காக நவீன இயந்திரங்கள் மற்றும் சாரம் அமைப்பதற்கான தளவாடப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது. மேலும் தற்காலிகமாக உயர்மட்ட பாலத்தில் பைக்குகள் மற்றும் சிறிய வாகனங்கள் சென்று வந்த நிலையில் முற்றிலும் பாலத்தில் வாகனங்கள் செல்வதை தடை செய்யும் வகையில் இரு பக்கங்களிலும் பேரிகார்டுகளை வைத்து அடைத்து சீரமைக்கும் பணியை தற்போது வரை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது 5 மாதங்கள் ஆகியும் பணிகள் முடிவடையவில்லை. விரைவில் முடிவதற்கான எந்த அறிகுறியும் இல்லையே என அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், பாலத்தின் பணியானது துரிதமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தெரிவித்தபடி நடுப்பகுதியில் உள்ள சேதமடைந்த 9வது தூணின் அடிப்பகுதியில் தண்ணீர் வருவதை தடுக்க சுற்றிலும் மணல் மூடைகள் கொண்டு அடைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியானது பெரும் சிரமத்திற்குள் தற்காலிக படகு உதவியுடன் பணியாளர்கள் தண்ணீரில் நீந்தியபடி செய்து வருகின்றனர்.

தொடர்ந்து ஹைடெக் டெக்னாலஜி மூலம் சாயல் ஸ்டெப்லைசன் அமைத்து கிரேன் உதவியுடன் இன்னும் சில தினங்களில் நடுப்பகுதி உயர்த்தப்படும். அதேநேரம் பிளாட்பார்மில் இணைப்புகளில் உள்ள பழைய பேரிங்குகள் அகற்றப்பட்டுள்ளது. இந்த 19 இணைப்புகளுக்கும் ஜிக்சக் கிரில் மூலம் சீரமைக்கப்படும். அனைத்து பணிகளும் விரைவில் சீரமைக்கப்பட்டு முழுவதும் இன்னும் 3 மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: