நாமக்கல், ஏப்.23: சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று குடும்பத்துடன் பொதுமக்கள் குவிந்ததால், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அரசு, தனியார் பஸ்களில் மக்கள் நின்றபடியே பயணித்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க, நேற்று புறப்பட்டு சென்றனர். அரசு போக்குவரத்து கழகம் வெளியூர் செல்லும் மக்களுக்காக மண்டலங்கள் தோறும் 500 பஸ்கள் வரை இயக்கி வருகிறது. தவிர, ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கிய போதிலும், பஸ்கள் மற்றும் ரயில்களில் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.
அரசு விரைவு பேருந்து, ஆம்னி பஸ்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், அரசு மற்றும் தனியார் பஸ்களில் நேற்று மதியம் முதலே கடுமையாக பயணிகள் கூட்டம் காணப்பட்டது. நீண்ட தூர பஸ்களில் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்பவர்கள் நின்றபடி பயணித்தனர். அனைத்து பேருந்து நிலையங்களில் பஸ்கள் நிரம்பி, மக்கள் கூட்டம் அலைமோதியது. நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து பஸ்களும் நிரம்பி வழிந்தது. சேலம், ஈரோடு, கோவை, திருச்சி போன்ற ஊர்களில் இருந்து நாமக்கல்லுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. நாமக்கல் வழியாக பகல் மற்றும் இரவு நேரத்தில் இயக்கப்பட்ட ரயில்களில் முன்பதிவு, பொது பெட்டிகளில் கூட்டம் அலைமோதியது.
