நாமக்கல் மாவட்டத்தில் 12.10 லட்சம் பேர் வாக்களிப்பு

நாமக்கல், ஏப்.25: நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில், 12.10 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 1 லட்சத்து 13 ஆயிரத்து 718 பேர் ஓட்டு போடவில்லை. தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 1,781 வாக்குச்சாவடிகளில், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான துர்காமூர்த்தி கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், மொத்தம் 13,23,753 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம், ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,01,360 வாக்குகளும், சேந்தமங்கலம் தொகுதியில் 2,06,848 வாக்குகளும், நாமக்கல் தொகுதியில் 2,08,629 வாக்குகளும், பரமத்திவேலூர் தொகுதியில் 1,85,124 வாக்குகளும், திருச்செங்கோடு தொகுதியில் 1,88,290 வாக்குகளும், குமாரபாளையம் தொகுதியில் 2,03,874 வாக்குகளும் என மொத்தம் 11,94,125 வாக்குகள் பதிவாகியுள்ளது. அதே போல், ராசிபுரம் தொகுதியில் 2,703 தபால் வாக்குகள், சேந்தமங்கலம் தொகுதியில் 2,257 தபால் வாக்குகள், நாமக்கல் தொகுதியில் 3,110 தபால் வாக்குகள், பரமத்திவேலூர் தொகுதியில் 2,664 தபால் வாக்குகள், திருச்செங்கோடு தொகுதியில் 2,874 தபால் வாக்குகள், குமாரபாளையம் தொகுதியில் 2,302 தபால் வாக்குகள் என மொத்தம் 15,910 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், முதல் தலைமுறை வாக்காளர்கள், அரசு அலுவலர்கள் என மொத்தம் 12,10,035 வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், 91.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சட்டமன்ற பொதுத்தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் 13,23,753 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 12,10,035 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 718 பேர் வாக்களிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் 100 சதவீத வாக்குப்பதிவிற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாடகம், நடனம், பேரணி, என விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டும், 100 சதவீத வாக்குப்பதிவு முயற்சி கைகூடவில்லை.

Related Stories: