கேரளத்தில் காங்கிரஸ் கட்சி புகார் எதிரொலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைகளை எந்த காரணம் கொண்டும் திறக்கக் கூடாது: மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கும் கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்வேறு மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோழிக்கோடு பேராம்பிரா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை முன்னறிவிப்பின்றி திறந்ததாக புகார் எழுந்தது.

இதில் சதித்திட்டம் இருப்பதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தவேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை திறக்கவில்லை என்றும், அதற்கு அருகிலுள்ள சீல் வைக்கப்படாத அறை தான் திறக்கப்பட்டது என்றும் பேராம்பிரா தொகுதி தேர்தல் அதிகாரி கூறினார். இந்த பரபரப்புக்கு இடையே பாலக்காடு மாவட்டம் நென்மாரா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையையும் நேற்று திறக்க முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அறை திறக்கப்பட மாட்டாது என்று பாலக்காடு மாவட்ட கலெக்டர் மாதவிக்குட்டி கூறினார். இந்நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கேரள தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பது: வாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்பட தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கப்பட்டுள்ள சீல் வைத்த மற்றும் சீல் வைக்காத அறைகளை எந்தக் காரணம் கொண்டும் திறக்க வேண்டாம்.வாக்கு எண்ணிக்கை தினம் வரை எந்த அறைகளையும் திறக்க தேவையில்லை. அதிகாரிகள் தங்களது கைகளில் வைத்திருக்க வேண்டிய ஆவணங்களை பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டியிருந்தால் அதற்கான முழு பொறுப்பும் அந்த அதிகாரிகளுக்குத் தான் உண்டு.ஆவணங்களை எடுப்பதற்காக பாதுகாப்பு அறைகளை திறப்பது ஏற்கத்தக்கதல்ல. அது தேவையில்லாத சந்தேகத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: