புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் கெஜ்ரி வால் உள்ளிட்டோரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை ெசய்தது. இதை எதிர்த்து சிபிஐ தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வருகிறார். நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா விசாரிக்கக் கூடாது என்றும் வேறு நீதிபதியிடம் இந்த வழக்கை மாற்ற வேண்டும் என கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா அளித்த தீர்ப்பில்,‘‘எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் வழக்கு தொடுப்பவர் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் நீதிபதியை மதிப்பிட அனுமதிக்க முடியாது. ஆதாரமற்ற பாரபட்சமான அச்சத்தை திருப்திப்படுத்துவதற்காக நீதிபதிகள் தங்களைத் தாங்களே வழக்கில் இருந்து விலக்கிக்கொள்ள முடியாது. எந்தவொரு அடிப்படையுமின்றி ஒரு அரசியல் தலைவர் நீதிமன்றத்தின் மாண்பை சேதப்படுத்த அனுமதிக்க முடியாது. ஒரு நீதிபதி மீதான தனிப்பட்ட தாக்குதல் என்பது நீதித்துறை மீதான தாக்குதலாகும் என்று தெரிவித்தார்.
