டெல்லி என்சிஆர் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவர் அதிரடி கைது.! பெரும் சதி முறியடிப்பு

டெல்லி; டெல்லி NCR பிராந்தியத்தில் துப்பாக்கி சூடு, கையெறி குண்டு தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை அரங்கேற்றுவதற்கான ஒரு பெரிய சதிதிட்டத்தை காவல்துறை முறியடித்துள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்டவனும், ISI-ன் ஏஜென்ட்டாக செயல்பட்டு வருபவனுமான ஷாஜாத் பட்டி என்பவனின் தூண்டுதலின் பேரில் பெரிய தாக்குதல் சதி திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமாக இருந்ததாக கூறப்படும் இருவரை டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருகிக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த ராஜவீர் மற்றும் விவேக் பஞ்சாரா ஆகிய இரு குற்றவாளிகளும், டெல்லி சிறப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை துணை ஆணையர் (சிறப்புப் பிரிவு) பிரவீன் குமார் திரிபாதி தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார். டெல்லி என்சிஆர் பகுதியில் கையெறி குண்டு தாக்குதல்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளை நிகழ்த்துவதற்கான சதி திட்டம் குறித்து ரகசிய தகவல்கள் கிடைத்ததை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் இது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் தெரிவித்தார்.

தீவிர விசாரணையை தொடர்ந்து முதலில் விவேக் பஞ்சாரா என்ற குற்றவாளி முதலில் கண்டறியப்பட்டு, குவாலியரின் டப்ரா (Dabra) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டான். இவனிடம் நடத்திய உரிய முறையிலான விசாரணையை தொடர்ந்து தனது கூட்டாளியான ராஜ்வீர் குறித்து தகவல்களை தெரிவித்தான். இதனை தொடர்ந்து டெல்லியின் சராய் காலே கான் பகுதியில் வைத்து மற்றொரு குற்றவாளியான ராஜ்வீர் கைது செய்யப்பட்டான் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டு உள்ளார்.

ராஜ்வீரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தனது வழிகாட்டியான ஷாஜாத் பட்டி உத்தரவின் பேரில், டெல்லி-NCR பகுதியில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் நுழைந்து தாக்குதல் நடத்த தயாராகி கொண்டிருந்த போது பிடிபட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. கைது செய்யப்பட்ட ராஜ்வீரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. தவிர இந்த சதியுடன் தொடர்புடைய, குற்றத்தை உறுதிப்படுத்தும் வகையிலான வீடியோக்கள் மற்றும் வாய்ஸ் ரெக்கார்ட்ஸ்களை கொண்ட இரண்டு மொபைல்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Related Stories: