திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகன் விவேக் கிரண் தன்னுடைய குடும்பத்தினருடன் குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது அதை வீடியோ எடுத்த தனியார் தொலைக்காட்சி நிருபரை விவேக் கிரணுடன் வந்தவர்கள் தாக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகன் விவேக் கிரண் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் துபாயில் சொந்தமாக சில நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் விவேக் கிரண் தன்னுடைய குடும்பத்தினருடன் குருவாயூர் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்தார்.
அப்போது அங்கு இருந்த ஒரு மலையாள தொலைக்காட்சி கேமராமேன் அதை வீடியோ எடுத்தார். அதைப் பார்த்த விவேக் கிரணுடன் வந்தவர்கள் அந்த கேமராமேனை தாக்க முயற்சித்தனர். மேலும் அவர் பதிவு செய்திருந்த காட்சிகளை உடனடியாக அழிக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விவேக் கிரண் தரிசனத்திற்கு வந்ததை போட்டோ எடுத்த சிலரையும் அவருடன் வந்தவர்கள் போட்டோ எடுக்கக்கூடாது என்று எச்சரித்தனர். இதற்கிடையே தன்னை தாக்க முயற்சித்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்போவதாக தொலைக்காட்சி கேமராமேன் கூறினார்.
