ரேஷன் பொருட்கள் ஊழலில் சிக்கிய திரிணாமுல் எம்பியான நடிகைக்கு சம்மன்: நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடப்பதால் பரபரப்பு

கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நடிகையான எம்பி நுஸ்ரத் ஜஹானுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில், ஏழைகளுக்கு வழங்கப்படும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள கோதுமை மற்றும் அரிசி போன்ற ரேஷன் பொருட்கள் சட்டவிரோதமாக வங்கதேசம் நாட்டிற்கு கடத்தப்பட்டதாக மிகப்பெரிய ஊழல் புகார் எழுந்தது. இது தொடர்பாக நடிகையும், திரிணாமுல் எம்பியுமான நுஸ்ரத் ஜஹானின் தொகுதி பஸீர்ஹாட் எல்லைப் பகுதிகளில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏராளமான லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த ஊழல் தொடர்பாக ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு ரியல் எஸ்டேட் நிதி மோசடி புகாரில் இவரிடம் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். தற்போது இந்த ரேஷன் பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் நுஸ்ரத் ஜஹானுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நாளை (ஏப். 22) நேரில் ஆஜராகும்படி நுஸ்ரத் ஜஹானுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், கொல்கத்தாவுக்கு பதிலாக டெல்லி அலுவலகத்தில் ஆஜராக அனுமதி கோர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குவங்க சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளைமறுநாள் தொடங்க உள்ள நிலையில், ‘அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக’ ஒன்றிய அரசு இந்த சம்மனை அனுப்பி உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Related Stories: