புதுடெல்லி: தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சட்டம் 2008ன் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த 2008ல் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பு, தீவிரவாதம், தேசத்துரோகம், கள்ள நோட்டு, மனித கடத்தல் மற்றும் வெடிபொருள் கடத்தல் போன்ற தேச பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை பாதிக்கும் குற்றங்களை, மாநில அரசின் சிறப்பு அனுமதியின்றி இந்தியா முழுவதும் விசாரிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இச்சட்டம் என்ஐஏவுக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்குவதாகவும், அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக, அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் நேற்று பட்டியலிடப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, ‘‘இந்த சட்டம் அரசியலமைப்பின் 14வது பிரிவை (சட்டத்தின் முன் அனைவரும் சமம்) மீறுவதாகவும், ஒன்றிய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளது. காவல்துறை என்பது மாநில அரசு பட்டியலின் கீழ் வருகிறது. இச்சட்டத்தின் பிரிவு 6(5)ன்படி, அதில் பட்டியலிடப்பட்ட ஒரு குற்றம் இச்சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு விரும்பினால், அக்குற்றத்தை விசாரிக்குமாறு என்ஐஏவுக்கு தாமாக முன்வந்து உத்தரவிடலாம்’’ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘மனுதாரர் தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. காவல் நிலையமே இல்லாத என்ஐஏவால் எப்ஐஆர் பதிவு செய்ய முடியுமா? தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்வது குறித்தும் அரசு தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். மனு தொடர்பாக ஒன்றிய அரசு, தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் பிற தரப்பினர் 4 வாரத்திற்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர். இந்த வழக்கு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு மற்றும் ஒன்றிய புலனாய்வு அமைப்புகளின் செயல்பாட்டில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
