சென்னை: சென்னையில் உள்ளவர்கள் சொந்த ஊர் சென்று வாக்களிக்க வசதியாக 11,323 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 வரை தற்போது இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 6,234 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வரும் 21/04/2026 முதல் 23/04/26 பிற்பகல் வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 6234 சிறப்புப் பேருந்துகள் மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக, 11,323 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
* சென்னையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்
கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம்: கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கும்பகோணம், கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம் வரை பேருந்துகள் இயக்கப்படும்.
* கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையம்: திருவண்ணாமலை, வந்தவாசி, போளூர் வரை பேருந்துகள் இயக்கப்படும்.
* கோயம்பேடு பேருந்து நிலையம்: கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
* மாதவரம் பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்பகோணம், திருச்சி, சேலம், திருவண்ணாமலை வரை பேருந்துகள் இயக்கப்படும்.
* முன்பதிவு வசதி
முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு 21/04/2026 முதல் 23/04/2026 வரை பயணம் செய்ய முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* பயணிகளின் வசதிக்காக 24×7 கட்டுப்பாட்டு அறை
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24×7 மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுமட்டுமின்றி. பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு. மாதவரம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை (Control Room) செயல்படும்.
* மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள்
பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.
* இரயில்கள் (தொடர் வண்டி)
பொதுமக்களின் வசதிக்காக 19-04-2026 முதல் 28-04-2026 வரை சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும் மற்றும் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 30 சிறப்பு இரயில்கள் இயக்கப்படவுள்ளது. குறிப்பாக 21-04-2026 முதல் 23-04-2026 வரை 5 சிறப்பு இரயில்கள் இயக்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
