தமிழ்நாட்டை வஞ்சிக்கவும் – வளர்ச்சியை தடுக்கவும் நினைப்பவர்களுக்கு ‘‘நான் என்றைக்குமே டேஞ்சர்”: சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி தான் நமது முதன்மையான குறிக்கோள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டை வஞ்சிக்கவும், வளர்ச்சியை தடுக்கவும் நினைப்பவர்களுக்கு நான் என்றைக்குமே டேஞ்சர் தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:  எல்லோருக்கும் வணக்கம். தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நான் மக்களை சந்தித்தாலும், இந்த வீடியோ மூலமாக சில விஷயங்களை உங்களிடம் மனது விட்டு பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.

இன்னும் கொஞ்ச நாட்களில் தேர்தல். இந்தச் சமயத்தில் எனக்கு ஒரு விஷயம் மைண்ட்-இல் வருகிறது. 2021ல் இதே போன்று ஒரு சட்டமன்றத் தேர்தல். அந்தச் சமயத்தில் சில பேர் ”Stalin is more dangerous than Karunanidhi” என்று சொன்னார்கள். கலைஞரோடு என்னை எப்போதுமே ஒப்பிட முடியாது. அவரை நான் அப்பா என்று கூப்பிட்டதைவிட, தலைவர் என்று கூப்பிட்டதுதான் அதிகம்.

அப்படிப்பட்ட தலைவரைவிட நான் more dangerous என்று அவர்கள் சொல்லும்போது, எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது. தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், நம்முடைய வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் என்றைக்குமே டேஞ்சர்தான். இதில் கலைஞரைவிட ஒரு படி மேலே இருக்கிறேன் என்றால், அது எனக்கு பெருமைதானே. ஏனென்றால் இதெல்லாம் நம்முடைய தமிழர்களின் ரத்தத்திலேயே இருக்கிறது.

என் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் என்னை முதல்வராக்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ”ஸ்டாலின் சார், முதல்வர் ஆனது எல்லாம் ஓகே… இந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்?” என்று யாராவது கேட்டால், நம்மால் மணிக்கணக்காக, ஏன் நாட்கணக்காகக்கூட பேச முடியும். முக்கியமாக எப்போதுமே தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து, தமிழ் மக்களுக்காக சண்டை செய்திருக்கிறேன் என்பதை இன்னும் பெருமையாக என்னால் சொல்லி கொள்ள முடியும். சமூக நீதியுடன்கூடிய வளர்ச்சி என்பதுதான் நம்முடைய முதன்மையான குறிக்கோள்.

அந்த வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பேருந்து பயணம், தோழி மகளிர் விடுதி, மக்களைத் தேடி மருத்துவம் என்று, கருவில் இருக்கும் குழந்தையிலிருந்து, வயது முதிர்ந்த மூத்த குடிமக்கள் வரைக்கும் அனைவரும் பயனடைவது போன்று நிறையத் திட்டங்களைக் கொண்டு வந்தோம். ”நம்மிடம் காசு இருந்தால் எடுத்து கொள்வார்கள், நிலம் இருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள். ஆனால் படிப்பை மட்டும் யாராலும் உன்னிடமிருந்து எடுத்து கொள்ளவே முடியாது” என்று ஒரு சினிமா வசனம் இருக்கிறது.

அது நூற்றுக்கு நூறு உண்மை. நான் பதவியேற்றதிலிருந்து மாணவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் இதே கருத்தைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கல்வி ஒன்றுதான் உங்களிடமிருந்து யாரும் திருட முடியாத ஒரே சொத்து. அதனால்தான் பள்ளியில் காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், அரசுப் பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை, ‘நான் முதல்வன்’ திட்டம் என்று கல்விக்காக மட்டும் இந்த ஆட்சியில் அவ்வளவு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.

நீங்கள் எந்த டேட்டாவை வேண்டுமானாலும் எடுத்து பாருங்கள். தொழில்துறை, விவசாயம், கல்வி என்று அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு டாப்-இல் இருக்கும். அதற்கு அடையாளமாக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக, எந்த மாநிலமும் தொடாத இரட்டை இலக்கத்தை தொட்டு இருக்கிறது. இன்னும் உயரம் தொடுவோம் என்ற உறுதியும் எனக்கு இருக்கிறது. இப்படி அனைத்து வகையிலும் நாம் முன்னேறி இருந்தாலும், ஒரு சில குறைகளும் இருக்கிறது என்பது எனக்கும் தெரியும்.

ஏனென்றால் நம்முடைய ஆட்சியை பற்றிய விமர்சனம், feedback அனைத்தையும் காது கொடுத்து கேட்பவன் நான். குறைகளாக சொல்லப்படும் ஒரு சில விஷயங்களில்கூட நாம் மற்ற மாநிலங்களை கம்பேர் செய்யும்போது மிகவும் சிறப்பாகத்தான் இருக்கிறோம். இருந்தாலும், அந்த குறைகளையும் சரி செய்ய அனைத்து விதமான வழிமுறைகளையும் நாம் ஏற்கனவே நடைமுறைப்படுத்திவிட்டோம். அதன் விளைவுகளை இன்னும் கொஞ்ச நாளில் நாம் பார்ப்போம்.

உங்கள் அனைருக்கும் தெரியும், கடந்த வாரம் ஒன்றிய அரசு தொகுதி மறுவரையறை என்று ஒரு மசோதா கொண்டு வந்தார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, தொழில் வளர்ச்சியில் best performing state-ஆக இருக்கும் நம்மைத் தண்டிப்பதற்காகவே அந்த மசோதாவை கொண்டு வந்தது போன்று இருந்தது. ஆனால் அந்த மசோதா வந்த அடுத்த நொடி, முதல் எதிர்ப்பும், மசோதாவின் நகல் எரிப்பும் நம்முடைய தமிழ் மண்ணில் என் மூலமாக ஆரம்பித்தது. நாம் கொளுத்திய அந்த நெருப்புதான் இன்றைக்குக் கொழுந்து விட்டு எரிந்து அந்த மசோதாவைச் சாம்பலாக்கி இருக்கிறது.

தேர்தல் நடக்கும் இந்த சமயத்திலேயே இவ்வளவு ஆணவத்தோடு நம்மை வஞ்சிக்க நினைக்கிறார்கள் என்றால், இதே தேர்தலில் அவர்களின் அடிவருடி எடப்பாடி பழனிசாமி வென்று ஆட்சிக்கு வந்துவிட்டால் என்னென்ன கொடுமையெல்லாம் இங்கே அரங்கேறும் என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியது இல்லை. பா.ஜ.க. போன்ற மதவாத சக்திகள் தி.மு.க வை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பொய்யான ஒரு பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை.

எங்கள் ஆட்சியில்தான் ஆயிரக்கணக்கான கோவில்களுக்குக் குடமுழுக்குச் செய்திருக்கிறோம். 7,000 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்டிருக்கிறோம். இப்படிப் பொய்யான பிரச்சாரம் செய்கிறவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்கிறேன். 60 வருடங்களாகத் திராவிடக் கட்சிகள் ஆளும் தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அதிகமான கோவில்கள் இருக்கின்றன.

இன்றைக்கு அ.தி.மு.க. என்ற அடிமை கட்சிக்கு ஓனர் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கிறிஸ்துமஸ் அன்று சர்ச்சில் புகுந்து கலவரம் செய்வது, புல்டோசர் வைத்து இஸ்லாமிய மக்களுடைய வீடுகளை இடிப்பது என்று எவ்வளவோ கொடுமைகள் செய்கிறார்கள். இதெல்லாம் தெரிந்தும் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து கிடக்கிறார். ஆனால் சிறுபான்மையின மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் என்றைக்குமே நாங்கள் களத்தில் நிற்போம்; அவர்கள் உரிமைகளுக்காகப் போராடுவோம்.

1970ம் ஆண்டு மிசா என்ற ஒரு போரை அன்றைய ஒன்றிய அரசு நடத்தியபோது அதை எதிர்த்துப் போரிட்டவன்தான் இந்த ஸ்டாலின். அப்போது நான் ஒரு இளைஞன்; கலைஞரின் மகன். இன்றைக்கு நான் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன். இப்போதும் நமக்கு எதிரான போரை எதிர்த்து நிற்கிறேன். எந்த பிரச்சனை வந்தாலும் தமிழ்நாட்டையும் – தமிழர்களையும் பாதுகாத்து நிற்பேன்.

இது என்னுடைய உறுதிமொழி. எந்த வகையில் வந்தாலும், எத்தனை முறை முயற்சி செய்தாலும் தி.மு.க. இருக்கும் வரையில் தமிழ்நாட்டில் பா.ஜ.கவும் அவர்களின் கொடூரமான மக்கள் விரோதச் சித்தாந்தமும் வெற்றி பெற முடியவில்லை என்று வரலாறு சொன்னால் போதும். அது மட்டும் போதும். நம் உரிமையை, நம் உழைப்பை, நம் மக்களுடைய கலாச்சாரத்தை, நம் மொழியை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களோ, அவர்களுடைய அடிமைகளோ நமக்கு வேண்டாம்.

இந்த வளர்ச்சியும் – வளமான எதிர்காலமும் அடுத்த 5 ஆண்டுகளும் தொடர வேண்டும். நான் உங்கள் அப்பாவாக, அண்ணனாக, ஒரு தம்பியாக, ஒரு தோழனாக உங்களிடம் உரிமையோடு கேட்கிறேன். மீண்டும் இந்த நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்திலும், எங்களது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு பேசியுள்ளார்.

Related Stories: