மகாராஷ்டிரா, பீகார் போல் அதிமுக காலியாகும் மாநில கட்சிகளை அழிப்பதே பிரதமர் மோடியின் வித்தை: திருமாவளவன் காட்டம்

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்கை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி எரவாஞ்சேரி பகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: எஸ்.டி.பி.ஐ, தேமுதிக கட்சிகள் திமுக கூட்டணிக்கு வந்திருப்பது கூடுதல் பலமாகும்.

மேலும் முஸ்லிம், கிறிஸ்தவர் வாக்குகள் தேவையில்லை என சொல்லும் பாஜவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்து, இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் ஓட்டு தேவையில்லை என வெளிப்படையாக முடிவெடுத்து விட்டார். இஸ்லாமியர்களை அரவணைத்து கொண்டவர் மு.க.ஸ்டாலின். பாஜவை எதிர்த்த ஜெயலலிதாவை மறந்து விட்டு எடப்பாடியார், பாஜவோடு கூட்டணி வைத்துள்ளார்.

அதிமுக-பாஜவால் திமுகவை நேரடியாக வெல்ல முடியாது என்பதால் விஜய்யை இறக்கி விட்டிருக்கின்றனர். திமுகவை ஏன் இவ்வளவு மூர்க்கமாக விஜய் எதிர்க்கிறார்? திமுகவை வீழ்த்தி விட்டு விஜய்யால் ஆட்சி அமைக்க முடியுமா? பெரம்பூரில் ஜெயிக்க முடியாது என்ற சந்தேகத்தால் திருச்சியில் நிற்கிறார். அவராலும் ஜெயிக்க முடியாது, அவர் வேட்பாளர்களாலும் ஜெயிக்க முடியாது.

பாஜ-அதிமுக கூட்டணியை ஜெயிக்க வைப்பதே விஜய்யின் நோக்கம். ஓட்டை பிரிக்கவே விஜய் களமிறக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் கிறிஸ்தவ ஓட்டுக்களை பாஜ கூட்டணி வாங்க முடியாது என்பதால், அந்த ஓட்டுக்களை பிரிப்பதற்காகவே விஜய் களமிறக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் இளைஞர்கள் சிலர் விஜய்க்கு வாக்கு சேகரிக்கின்றனர். இதுதான் மோடியின் திட்டம். இரட்டை இலை சின்னம் உணமையில் அது அதிமுக சின்னம் இல்லை. அது பாஜவின் சின்னம்.

ஒரு வேளை அதிமுக ஆட்சி அமைத்தால், நிதிஷ்குமார் மாதிரி எடப்பாடியை தூக்கி விட்டு எச் ராஜாவை முதலமைச்சராகி விடுவார்கள். வெற்றி பெறும் எம்.எல்.ஏக்கள் பாஜவில் இணைந்து விடுவர். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மோடி வித்தைதான் நிகழும், மோடி வித்தை என்பது மாநில கட்சிகளை அழிப்பது, அதிமுக அழிக்கப்படும்.

அதற்கு மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்கள் உதாரணம். நிதிஷை கட்டாயப்படுத்தி எம்பியாக்கி விட்டு இப்போ பாஜ ஆட்சி பீகாரில் நடைபெற்று வருகிறது. அந்த நிலைதான் தமிழ்நாட்டில் உருவாகும்.அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டால் பாஜ ஆட்சிக்கு வரும். அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் பாஜவைத்தான் வலுப்படுத்துகிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: