திருச்செந்தூர்: சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று எடப்பாடி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு காரணம் இங்கிருக்கும் மக்கள் தான். நீங்கள் கொடுத்த பதவி தான் இது. நான் உங்கள் வீட்டில் ஒருவனாக இருக்கிறேன். மீண்டும் நான் மனித பிறவியாக பிறந்தால், உங்கள் குடும்பத்தில் ஒருவனாகப் பிறக்க வேண்டும் என உருக்கமுடன் பேசினார்.
ஆனால் திமுக எம்பி-யான கனிமொழி தனது சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் இந்த உருக்கமான பேச்சை ஒரே நொடியில் கேலிக்கு உள்ளாக்கி விட்டார். திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திமுக வேட்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்கு சேகரித்தார் கனிமொழி. அப்போது பேசிய அவர் தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க பார்த்தார்கள். ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்த ஒன்றிய அரசின் முயற்சியை தோற்கடித்து விட்டோம். எனவே இந்த மசோதாவை கொண்டு வந்த மோடி, நாடாளுமன்றத்தில் அது தோல்வியடைந்து விட்ட காரணத்தால் தான் ஒரு பிரதமர் என்பதையும் மறந்து புலம்பி கொண்டிருக்கிறார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு என்னவாயிற்று! அவர் ஏற்கனவே தமிழ்நாட்டில் தானே பிறந்துள்ளார். தமிழனாக இருக்கிறேன் என்று தானே சொல்கிறார்.. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு துரோகம் செய்ய நினைத்த போது அதற்கு சாதகமாக இங்கே பேசி கொண்டிருந்துவிட்டு, தேர்தல் நேரத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் ஏதாவதொரு தமிழக மக்களின் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என நினைக்கிறேன் என்கிறார்.
எனக்கு மறுபிறவியில் எல்லாம் நம்பிக்கை இல்லை, ஆனால் அடுத்த ஜென்மம் என்று இருந்தால் அவர் (எடப்பாடி பழனிச்சாமி) அவருக்கு பிடித்த இடத்தில் குஜராத்தில் போய் வேண்டுமானால் பிறந்து கொள்ளட்டும். ஆனால் தயவு செய்து தமிழ்நாட்டில் மட்டும் பிறந்து விட வேண்டாம். குஜராத்தில் பிறந்தவர்காக தானே இப்போது கைகட்டி நிற்கிறார். ஆகவே அடுத்த முறை பிறந்தால் கொஞ்சம் முதுகெலும்புடன் குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் பிறக்க தேவையில்லை” என்று சிரித்து கொண்டே மிகவும் காட்டமாக விமர்சித்து உள்ளார் கனிமொழி. எடப்பாடி பழனிசாமியின் சீரியஸான பேச்சை தனது பாணியில் விமர்சித்து, குழுமியிருந்த மக்கள் மற்றும் தொண்டர்களை ஒரே நொடியில் சிரிக்க வைத்து விட்டார் கனிமொழி.
