மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தரராஜை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 5 வருடத்தில் திமுக அரசு திருவொற்றியூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. ரூ.150 கோடியில் ஆறு மற்றும் முகத்துவாரம் ஆழப்படுத்தி தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.25 கோடியில் விம்கோ நகர் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.25 கோடியில் அண்ணாமலை நகரில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடக்கிறது. ரூ.24 கோடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கும் பணி மற்றும் நெட்டுகுப்பம், தாழங்குப்பம் கடலோரப் பகுதியில் ரூ.20 கோடியில் மீன் இறங்கு தளம், வலை பின்னும் கூடம், மீன் காயவைக்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரூ.16 கோடியில் அரசு கலை கல்லூரியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுள்ளன.
ரூ.14 கோடியில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. பாரதியார் நகரில் மீன் இறங்கு தளம், ரூ.10 கோடியில் மணலி ஏரியில் படகு குழாம், கத்திவாக்கத்தில் ரூ.10 கோடியில் நவீன மீன் மார்க்கெட் மற்றும் திருமண மண்டபம், ரூ.10 கோடியில் திருவொற்றியூர் மீன் மார்க்கெட் வளாகம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. மணலி அம்பேத்கர் தெருவில் ரூ.8 கோடியில் திருமண மண்டபம், கத்திவாக்கத்தில் ரூ.5 கோடியில் புதிய பேருந்து நிலையம், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ரூ.5 கோடியில் சமுதாய நலக்கூடம் என இவ்வளவு திட்டங்களையும் செய்து கொடுத்திருக்கிறோம்.
இந்த தேர்தலில் ஜெயிக்கப்போவது டெல்லி அணியா அல்லது தமிழ்நாடு அணியா?, டெல்லி அணியை முற்றிலுமாக தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழ்நாடு அணி வெற்றி பெற்று காட்ட வேண்டும். இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். கடந்த ஆண்டுகளில். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை அமல்படுத்துவோம் என்று கூறுகிறோம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய பாஜ அரசு எந்த விதத்திலாவது தமிழ்நாட்டுக்கு உதவி செய்திருக்கிறார்களா, தமிழ்நாட்டுக்கு ஏதாவது திட்டங்களைக் கொடுக்கிறார்களா, நாம் கேட்கும் நிதியைக் கொடுத்திருக்கிறார்களா எந்த உதவியையும் ஒன்றிய அரசு செய்யவில்லை.
தேர்தல் அறிவித்த உடன் மோடியும், அமித்ஷாவும் மாறி மாறி தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு தேவையான எந்த திட்டங்களையும் அவர்கள் வழங்குவதில்லை. கடந்த ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் கிடையாது. ‘தமிழ்நாடு’ என்ற பெயரே பட்ஜெட்டில் இல்லை. இப்படி தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணிக்கக்கூடிய மோடி அரசை, ஒன்றிய பாஜ அரசை பழிவாங்க வேண்டிய நேரம், தீர்த்துக்கட்ட வேண்டிய நேரம். அவர்களுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம். எல்லாவற்றையும் விட மிக முக்கியம், ‘சங்கிக் கூட்டத்தை’ தமிழ்நாட்டிற்குள் நுழைய விடக்கூடாது. ‘அடிமைக் கூட்டத்தை’ மீண்டும் தமிழ்நாட்டுக்குள், தலையெடுக்க விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
* சேப்பாக்கத்தில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி பகுதி, 120 அ, 119, 119 அ வட்டத்திற்குட்பட்ட இடங்களில் வீதிவீதியாக ஆட்டோவில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். குறிப்பாக 120 அ வட்டத்திற்குட்பட்ட நடு குப்பத்தில் தொடங்கி நீலம் பாட்ஷா தர்கா தெரு, வீ.ஆர்.பிள்ளை தெரு, முனுசாமி தெரு, கஜபதி தெரு, ராம் நகர் உள்ளிட்ட இடங்களில் வீதி வீதியாக ஆட்டோவில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டார்.
திமுக அரசின் சாதனை திட்டங்களை எடுத்துரைத்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் ஆதரவு திரட்டினார். தொகுதி மக்கள் பூக்களை தூவியும், ஆரத்தி எடுத்தும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பிரசாரத்தில் பங்கேற்றனர். மேலும் இளைஞர்கள், பெண்கள் திரண்டு வந்து கட்சிக் கொடியைச் சூழ்ந்தும், வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பூக்களைப் போட்டும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதுமட்டுமின்றி பிரசாரத்தின் போது தொண்டர்களின் குழந்தைகளுக்கு அவர் பெயர் வைத்தார்.
