திருவிக நகர் தொகுதி திமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை ஆதரித்து புளியந்தோப்பு காவல் நிலையம் அருகில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம்முடைய திமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். வெற்றி பெற வைத்து வீடுவீர்களா?. என்ன சத்தத்தை காணோம். இன்னும் சத்தமாக. நன்றி. டெல்லி மாநிலத்தில் 2 முறை முதல்வராக இருந்தவர் கெஜ்ரிவால். நம்முடைய அழைப்பை ஏற்று வந்துள்ளார். அவரை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பிஜேபிக்கு ஒரு ஜென்ம விரோதியாக இருக்கக்கூடியவர். எந்த மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதவர் கெஜ்ரிவால். அவர் மீது அபாண்டமான வகையிலே ஊழல் குற்றச்சாட்டை சொல்லி அவரை கைது செய்து சிறையிலே அடைத்து, அவரிடத்திலே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவரை முதல்வராக விடாமல் தடுத்தனர்.
என் உயிரே போனாலும் உங்களிடத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லி போராடியவர். உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி, தன் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் பொய், அவதூறான வழக்கு என்று நிரூபித்து விடுதலையாகி வெளியே வந்திருக்கக்கூடியவர் நம்முடைய கெஜ்ரிவால். அப்படிப்பட்ட கெஜ்ரிவால் இன்றைக்கு நம்மளை தேடி வந்து இருக்கிறார். உங்களிடத்திலே ஆதரவு கேட்க போகிறார். அதுமட்டுமல்ல இன்றைக்கு நம்முடைய மாநகராட்சியிலே, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு மாநகராட்சிகளிலே மாடல் ஸ்கூல் இருக்கின்றது என்று சொன்னால், அந்த மாடல் ஸ்கூலை டெல்லியிலே முதல்வராக இருந்த கெஜ்ரிவால் தான் அதை கொண்டு வந்து நிறைவேற்றினார்.
நானும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் டெல்லிக்கு சென்று பார்வையிட்டு, அதற்கு பிறகு தான் நம்முடைய தமிழ்நாட்டிற்கு நாம் கொண்டு வந்தோம் என்பது முக்கியமான ஒன்று. 100க்கும் மேற்பட்ட பள்ளிகளை நாம் திறந்து இருந்தாலும், மீண்டும் தமிழநாட்டில் உங்களுடைய அன்போடு, ஆதரவோடு 2.0 ஆட்சி அமைகின்ற போது 1000 ஸ்மார்ட் பள்ளிகளை திறக்க போகிறோம் என்று நாம் வாக்குறுதி தந்து இருக்கிறோம். அது மட்டுமல்ல புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டத்தை நாம் நடத்தி கொண்டிருக்கிறோம் என்றால், அந்த புதுமை பெண் திட்டத்தை தொடங்கி வைக்க வந்தவர் கெஜ்ரிவால். இதே வடசென்னை பகுதிக்கு வந்து தொடங்கி வைத்தார். அந்த அளவுக்கு அவருக்கும், நமக்கும் தொடர்பு இருக்கிறது என்பதற்காக தான் இதை எடுத்து சொன்னேன். ஆகவே, அவர் உங்களை தேடி சென்று வந்து இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
* உங்களுக்கு தந்த நல்ல திட்டங்களை பாஜ நிறுத்திடும் முதல்வர் மு.க.ஸ்டாலினைப் போல ஒரு தலைவர் கிடைக்க மாட்டார்: கெஜ்ரிவால்
பிரசாரத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அலுவலகத்தில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. டெல்லியில் நாங்கள் உருவாக்கியுள்ள அரசுப் பள்ளிகளையும், ‘மொஹல்லா கிளினிக்குகளையும்’ நேரில் வந்து பார்க்க விரும்புவதாக அவர் கூறினார். எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், பொதுவாக மாநில முதல்வர்களுக்கு அதிக ‘ஈகோ’ இருக்கும். ஆனால், நம்முடைய மு.க.ஸ்டாலினுக்கு துளியும் ஈகோ கிடையாது. அவர் ஒரு உண்மையான மக்கள் தலைவர். அவர் டெல்லிக்கு வந்து எங்களது பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் நேரில் பார்வையிட்டார்.
இன்று நான் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். இங்கே முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் திட்டங்களைக் கண்டு நான் வியக்கிறேன். சுமார் 1.3 கோடி பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை’ வழங்கப்படுகிறது. நான் மக்களிடம் கேட்கிறேன். உங்களுக்கு இந்த உரிமைத் தொகை கிடைக்கிறதா இல்லையா?. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய அற்புதமான திட்டம் கிடையாது. அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘காலை உணவுத் திட்டம்’ வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இது கிடையாது. அரசுப் பள்ளியில் படித்துவிட்டு உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் (புதுமைப் பெண் திட்டம்) வழங்கப்படுகிறது. இதுவும் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ மூலம் உங்கள் வீட்டு வாசலுக்கே மருந்துகள் மற்றும் மருத்துவச் சேவைகள் வருகின்றன.
இத்தகைய திட்டங்கள் வேறு எங்கும் இல்லை. இதற்காகத்தான் நான் ஸ்டாலினுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய வந்துள்ளேன். எதிரணியில் உள்ள என்டிஏ பற்றிச் சொல்ல வேண்டும். என்டிஏ என்பது இப்போது ‘நியூ டெல்லி அலையன்ஸ்’ ஆக மாறிவிட்டது. என்.டி.ஏ என்பது இப்போது பாஜ மட்டுமே. பாஜ இப்போது அதிமுகவைக் கைப்பற்றிவிட்டது. அதிமுக இப்போது பாஜவின் பிடியில் சிக்கியுள்ளது. பீகாரில் நிதிஷ் குமாருக்கு என்ன நடந்ததோ, அதைப் பாருங்கள். அவர் நேற்று வரை முதல்வராக இருந்தார். இன்று வெறும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதே கதிதான் அதிமுகவிற்கும் ஏற்படும். அதிமுகவை மூன்று துண்டுகளாக உடைத்துப் பாஜ அதை கைப்பற்றிவிடும். பாஜவிற்கு தமிழ்நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் பாஜவை வெறுக்கிறார்கள். உங்களுக்குப் பாஜவைப் பிடிக்குமா? (இல்லை என மக்கள் முழக்கமிட்டனர்). தமிழ்நாட்டிற்கு பா.ஜ. தேவையில்லை. அதிமுக செய்த மிகப்பெரிய துரோகம், பாஜவை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்ததுதான். எனவே, பாஜ அல்லது அதிமுகவிற்கு வாக்களிக்கும் முன் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் அவர்களுக்கு வாக்களித்தால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள இந்த அனைத்து நல்ல திட்டங்களும் நிறுத்தப்படும். இதற்காக நீங்கள் பின்னாடி வருத்தப்பட நேரிடும்.
டெல்லியில் எங்களது நல்ல திட்டங்களைப் பாஜ எப்படி முடக்கப் பார்க்கிறதோ, அதேபோல இங்கும் செய்வார்கள். டெல்லியில் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீரை அவர்கள் தடுக்கப் பார்க்கிறார்கள். இந்திய அரசில் நரேந்திர மோடிக்கு எதிராக ஒலிக்கும் மிக வலுவான குரல் மு.க.ஸ்டாலின் குரல்தான். அவர் தமிழ்நாட்டிற்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்காகவும், ஜனநாயகத்தைக் காக்கவும் போராடுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினைப் போல உங்களுக்கு ஒரு தலைவர் கிடைக்க மாட்டார். தமிழ்நாட்டுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஸ்டாலின் காட்டிய கடும் எதிர்ப்பை இந்தியாவே கண்டது. எனவே, திமுக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.
* புதிதாக அரசியலுக்கு வந்து நாடகம் நடத்துபவர் வேண்டுமா? பெரம்பூரில் உங்களோடு பணியாற்றும் உங்கள் வீட்டுப்பிள்ளை வேண்டுமா? முதல்வர் கேள்வி
பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், ‘பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை உங்களுடன் இருந்து பணி செய்பவர் வேண்டுமா, எங்கேயோ இருந்து புதிதாக அரசியலுக்கு வந்து நாடகம் நடத்திக் கொண்டு இருப்பவர் வேண்டுமா? என சிந்தித்து பாருங்கள். யாரையும் அரசியலில் தாக்கி பேசவில்லை. விமர்சனம் செய்ய விரும்பவில்லை. எனக்கு யாரையும் மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசும் வழக்கம் இல்லை. தேர்தல் நேரத்தில் அறிவித்த 90 சதவீத வாக்குறுதிகளை முடித்துள்ளோம். மீதி மத்திய அரசு நிதி வழங்கவில்லை. அதனால் தேங்கியுள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடும் ஆட்சி திமுக. எனவே ஆட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் மீண்டும் திமுக ஆட்சியை உருவாக்க வேண்டும். அதற்காகத்தான் நான் உங்களை நாடி வந்துள்ளேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து வேலை செய்யும் சிறந்த செயல்வீரர். ஒரு நல்ல தொண்டர் ஆர்.டி.சேகருக்கு சிறப்பான வெற்றியை நீங்கள் தேடித் தர வேண்டும்’ என்றார்.
