புவனேஸ்வர், ஏப். 21: ஒடிசாவில் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சரிபார்ப்பு பணியின் போது 9.8 லட்சம் வாக்காளர்கள் இறப்பு மற்றும் இருப்பிடம் மாறிய காரணங்களால் நீக்கப்பட வேண்டியவர்கள் என வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அடையாளம் கண்டனர். இது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முறையான சரிபார்ப்பு இல்லாமல் பெயர்கள் நீக்கப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் ஏப்ரல் 2ம் தேதிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை தெரிவித்து பெயர் நீக்கக் கோரிய 2 லட்சம் படிவம்-7 விண்ணப்பங்களை ஒடிசா மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆர்.எஸ்.கோபாலன் நிறுத்தி வைத்துள்ளார். மேலும், ‘வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கும் நடவடிக்கையின் போது குறிப்பாக இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கு முன் முழுமையான சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும்’ என அவர் தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி கோபாலன் அளித்த பேட்டியில், ‘‘வழக்கமாக ஒடிசாவில் ஒவ்வொரு ஆண்டும் இறப்பு மற்றும் இருப்பிடம் மாறிய காரணங்களால் வாக்காளர் பட்டியலில் இருந்து 7 முதல் 9 லட்சம் பெயர்கள் நீக்கப்படுகின்றன. இம்முறை சுமார் 9.8 லட்சம் பெயர்கள் நீக்க அடையாளம் காணப்பட்டதால் அது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை’’ என்றார்.
