கோழிக்கோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையை திறந்ததாக புகார்: விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை

 

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை அதிகாரிகள் திறந்ததாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. கோழிக்கோட்டில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெள்ளிமாடுகுன்னு பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இங்குள்ள பாதுகாப்பு அறையை அதிகாரிகள் திறந்ததாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. இதுகுறித்து பேராம்பிரா தொகுதி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பாத்திமா தெஹிலியா கூறியது:

இன்று (நேற்று) காலை 8 மணிக்கு எனக்கு போன் செய்த தேர்தல் அதிகாரி, பாதுகாப்பு அறையை திறக்கப் போவதாகவும் 9 மணிக்கு வரவேண்டும் என்றும் கூறினார். நான் 11 மணியளவில் என் சார்பாக ஒருவரை அங்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதற்குள் பாதுகாப்பு அறையை அதிகாரிகள் திறந்து விட்டனர். இதில் திட்டமிட்ட சதி நடந்துள்ளது. போதிய முன்னறிவிப்பின்றி பாதுகாப்பு அறையை திறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதுகுறித்து பேராம்பிரா தொகுதி தேர்தல் அதிகாரி கூறியது: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை திறக்கவில்லை. அதற்கு அருகிலுள்ள தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள சீல் வைக்கப்படாத அறைதான் திறக்கப்பட்டது. அதுவும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகளின் முன்னிலையில் தான் அந்த அறை திறக்கப்பட்டது. சாப்ட்வேர் அப்டேட் செய்வதற்காகத்தான் அந்த அறை திறக்கப்பட்டது என்றார்.

Related Stories: