ராஜஸ்தானில் பயங்கரம்: ரூ.80 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் பயங்கர தீ: பிரதமர் மோடி பங்கேற்க இருந்த திறப்பு விழா ரத்து

 

புதுடெல்லி: ராஜஸ்தானின் பச்சபத்ராவில் இந்தியாவின் முதல் பசுமைவெளி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.80 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க இருந்தார்.

இந்த கிரீன்பீல்ட் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளை கொண்ட இந்த வளாகம் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியை ஒருங்கிணைந்துச் செயல்படுத்துகின்றது. இதன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன் ஆண்டுக்கு 9மில்லியன் மெட்ரிக் டன். பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 2.4மில்லியன் மெட்ரிக் டன்களாகும். இந்த சுத்திகரிப்பு நிலையம் 17.0 என்ற உயர் நெல்சன் சிக்கல் குறியீட்டை கொண்டுள்ளதுடன் 26சதவீதத்துக்கும் அதிகமான பெட்ரோ கெமிக்கல் உற்பத்திக்கு உதவும்.

இந்நிலையில் இந்த வளாகத்தில் நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனங்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தன. சுத்திகரிப்பு நிலையத்தின் கச்சா எண்ணெய் வடிகட்டுதல் பிரிவு அமைந்திருந்த பகுதிக்கு அருகிலேயே தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்திற்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. தீ விபத்து சம்பவம் எதிரொலியாக பிரதமரின் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் சுத்திகரிப்பு நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Related Stories: