புதுடெல்லி: “இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இந்தியா, தென்கொரியா இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்கொரிய அதிபராக கடந்த 2025ம் ஆண்டு பதவி ஏற்ற லீ ஜே மியுங் இந்தியாவுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா வந்துள்ள முதல் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லியில் நேற்று தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இந்தியா, தென்கொரியா இடையே பொருளாதார ஒப்பந்தத்தை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், “உலகளாவிய பதற்றம் நிறைந்த இந்த காலகட்டத்தில் இந்தியாவும், தென்கொரியாவும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இருதரப்பினரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.
தென்கொரிய அதிபர் லீயின் வருகையை தொடர்ந்து எங்களின் இருதரப்பு ஒத்துழைப்பை எதிர்கால கூட்டாண்மையாக மாற்ற உள்ளோம். எங்கள் பகிரப்பட்ட முயற்சிகள் மூலம், அமைதியான, முற்போக்கான மற்றும் உள்ளடக்கிய இந்தோ பசிபிக் பகுதிக்கு நாங்கள் தொடர்ந்து பங்களிப்போம். எங்கள் சந்திப்பில் வர்த்தகம், முதலீடுகள், செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் இருநாட்டு மக்கள் உறவுகளை மேம்படுத்துவது ஆகியவை குறித்தும் விவாதித்தோம்” என்றார்.
