கோவா புனிதர் குறித்து சர்ச்சை பேச்சு: வலதுசாரி பேச்சாளர் மீது போலீசார் வழக்கு பதிவு: தேர்தலுக்காக மத நல்லிணக்கத்தை கெடுக்கும் முயற்சி என குற்றச்சாட்டு

 

பனாஜி: கோவாவின் வாஸ்கோடகாமாவில் சனாதன தர்ம ரக்ஷா சமிதி சார்பில் கடந்த 18ம் தேதி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுவாமி பிரமேஷானந்த், மாநில போக்குவரத்து அமைச்சர் மவுவின் கொடின்ஹோ, பாஜ எம்எல்ஏக்கள் சங்கல்ப் அமோன்கர், தாஜி சால்கர் உள்ளிட்டோர் முன்னிலையில் நிகழ்ச்சியில் பேசிய சனாதன மகாசங்கத்தின் நிறுவனர் கவுதம் கட்டார், கோவாவின் புனிதர் புனித பிரான்சிஸ் சேவியர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பேசிய கட்டாரை உடனே கைது செய்ய வேண்டுமென காங்கிரஸ் எம்எல்ஏ அல்டோன் டிகோஸ்டா வலியுறுத்தினார். ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வால்மீகி நாயக் கூறுகையில், ‘‘பாஜவின் மவுனமும், அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும், கட்டாரின் கருத்தை அங்கீகரிக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை இழந்து வருவதை உணர்ந்ததாலேயே, மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் இத்தகைய முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்’’ என குற்றம்சாட்டினார்.

இதற்கிடையே, புனித சேவியர் குறித்து அவமரியாதையான வார்த்தைகளை கட்டார் பேசியதாக காங்கிரஸ் நிர்வாகி பீட்டர் டிசவுசா வாஸ்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக கட்டார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.

கட்டார் மீது பாரதிய நியாய சம்ஹிதாவின் 299 (மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்குடன் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள்) மற்றும் 196 (மதம், இனம், மொழி அல்லது சாதியின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகை, வெறுப்பு அல்லது நல்லிணக்கமின்மையை ஊக்குவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சனாதன தர்ம ரக்ஷா சமிதி அமைப்பு கட்டாரின் பேச்சுக்காக மன்னிப்பு கேட்டது.

Related Stories: