மேற்கு வங்க பிரசாரத்தின்போது மாசாலாபொரி வாங்க பிரதமர் நின்றது நாடகம்: முதல்வர் மம்தா விமர்சனம்

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி ஜால்முரி வாங்குவதற்காக திடீரென நின்ற செயல் நாடகம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஜார்கிராம் உள்ளிட்ட இடங்களில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஜார்கிராமில் திடீரென காரை நிறுத்த கூறிய பிரதமர் மோடி அங்கிருந்த சிறிய கடையில் மசாலா பொரியை வாங்கினார். அதற்கான பணத்தை கடைக்காரர் பெற்றுக்கொள்ள மறுத்தபோது வற்புறுத்தி அதனை வழங்கினார். இது குறித்த வீடியோ காட்சிகள் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதியப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பிரதமரின் இந்த செயலை முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து முராரியில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘இந்த முழு நிகழ்வின் இயல்பான தன்மை கேள்வியை எழுப்புகின்றது. அங்கே முன்பே கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. பிரதமருக்கு பாதுகாப்பை வழங்கும் எஸ்பிஜி படை தான் இந்த முழு ஏற்பாட்டையும் செய்திருந்தது.

பிரதமர் மோடியின் சட்டை பாக்கெட்டில் 10ரூபாய் வைத்திருப்பது போல் காணப்பட்டது. இதை யாராவது நம்ப முடியுமா? அவர் திட்டமிடாமல் திடீரென நின்றபோது மட்டும் அங்கே கேமராக்கள் எப்படி இருந்தன? இந்த முழு நிகழ்வும் முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது” என்றார்.

Related Stories: