டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் பேசிய திமுக எம்.பி-யான ஆ.ராசா, தேசப்பற்று குறித்து எங்களுக்கு (திமுக-விற்கு), பாஜக பாடம் எடுக்க தேவை இல்லை என்று பேசியுள்ளார்.
நான் உங்களை போலவே இந்தியாவின் தென் பகுதியைச் சேர்ந்தவன் தான். ஆனால் நீங்கள் பேசுவது போன்ற பிரிவினைவாதத்தை நான் பேசுவதில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்றுதான். இந்த புதிய தொகுதி மறுவரையறை திட்டம் தென்னிந்திய மாநிலங்களுக்குக் கிடைத்துள்ள ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் ஆனால் தேவையின்றி இந்த விவகாரத்தை திசை திருப்பி பிரிவினைவாதத்தை திமுக தலைவர்கள் முன்வைப்பதாகவும் பாஜக எம்.பி தேஜஸ்வி பேசினார். தொகுதி மறுவரையறை தொடர்பான திமுக போராட்டம் குறித்து பாஜக உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவின் பேச்சுக்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய ஆ.ராசா, இந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழிகளை எங்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கும் போது, நாங்கள் எங்கள் அடையாளம் மற்றும் உரிமையை பாதுகாக்க நினைக்கிறோம், அதை எதிர்க்கிறோம்.
மாநிலங்களின் சுயாட்சிக்கு உரிய மரியாதையை கொடுக்கப்படாத போது தான் நாங்கள் உண்மையில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரின் போது வேறு எந்த மாநிலமும் வழங்காத அளவிற்கு ரூ.6 கோடி நிதியை தமிழ்நாடு வழங்கியது. அதே போல் 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது கலைஞர் முதல்வராக இருந்தார், அப்போது ரூ.100 கோடி நிதி வழங்கினார். எனவே தேசப்பற்று குறித்து பாஜக, எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை, நாட்டுப்பற்றை அவர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுக்க தேவையில்லை.
நாங்களும் தேசத்திற்காகவே நிற்கிறோம்.. ஆனால் ஒரே விஷயம் என்னவென்றால் நாங்கள் எப்போதும் எங்களுடைய சொந்த மற்றும் தனித்த அடையாளத்துடன் இருக்க விரும்புகிறோம் என்றார் ஆ.ராசா. தொடர்ந்து பேசிய அவர், மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்றார். தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் திமுக பிரிவினைவாதம் பேசுவதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி பேசியதற்கு திமுக எம்.பி. ஆ.ராசா மேற்கண்டவாறு பதிலடி கொடுத்து உள்ளார்.
