நாமக்கல்: ஒன்றிய பாஜ அரசின் தொகுதி மறுவரையறை என்ற கருப்புச் சட்டத்திற்கு எதிராக, நாமக்கல்லில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்புக்கொடி ஏற்றி வைத்து, சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தினார். இதேபோல, தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர். சட்ட நகலை எதிர்த்து, ஒன்றிய அரசை கண்டித்து நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு வழங்குவதற்கு, 2023ல் ஒன்றிய அரசு சட்டம் இயற்றியது.
இதையடுத்து வரும் 2029ம் ஆண்டு நடைபெறும் மக்களவை பொதுத்தேர்தலில் அதை அமல்படுத்த, ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. தமிழ்நாடு, மேற்குவங்கம் சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 3 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை ஒன்றிய அரசு அவசர அவசரமாக கூட்டியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மேற்குவங்கத்தில் உள்ள 42 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தற்போது அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், அவசரமாக நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது. இது தேர்தல் பிரசாரத்தை முடக்கும் செயல் மட்டுமல்லாமல், அவசரகதியில் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற, ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறையால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி எண்ணிக்கை வரையறுக்கப்படும் என்று ஒன்றிய அரசு கூறி வருகிறது.
இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் உயரும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் தற்போது 80 எம்பிக்கள் உள்ளனர். இது 125ஆக உயர்த்தப்பட்டு பின்னர் 143 ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தை பொறுத்தவரை 40 தொகுதியில் இருந்து 73 ஆக உயரும். ராஜஸ்தானில் 25ல் இருந்து 48 ஆகவும், மகாராஷ்டிராவில் 48ல் இருந்து 79 ஆகவும், மத்தியபிரதேசத்தில் 29ல் இருந்து 50 ஆகவும் உயரும் என்று தெரியவந்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் 39ல் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 51 ஆக மட்டுமே உயரும் என்று தெரியவந்துள்ளது. எல்லா மாநிலங்களிலும் 2 மடங்கு மற்றும் அதற்கு மேல் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் நிலையில், தமிழகத்தில் வெறும் 12 சீட்டுகள் மட்டுமே உயரும் வாய்ப்புள்ளது. விகிதாச்சார அடிப்படையில் பாதிப்பு தமிழகத்திற்கு தான் ஏற்படும். அதே நிலைதான் தென்மாநிலங்கள் அனைத்துக்கும் என்று தெரியவந்துள்ளது.
குறிப்பாக கேரள மாநிலத்தில் 20 தொகுதியில் இருந்து 23ஆகவும், ஆந்திராவில் 42ல் இருந்து 59ஆகவும், ஒடிசாவில் 21ல் இருந்து 29 ஆகவும், மேற்குவங்கத்தில் 42ல் இருந்து 64 ஆகவும் உயர்த்தப்படுகிறது. குறிப்பாக ஒன்றிய அரசை எதிர்க்கும் மாநிலங்களுக்கு இந்த தொகுதி மறுவரையறை பெரிய பாதிப்பை உருவாக்கியுள்ளது. இதனால் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் கட்சிகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த பிரச்னை குறித்தும், நாடாளுமன்ற கூட்டத்தில் திமுக எம்பிக்கள் செயல்பாடு குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் விவாதித்தார். அதன் பின்னர், தொகுதி மறுவரையறை என்ற பெயரில், தனது லிமிட்டை தாண்டி, ஒன்றிய பாஜ அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது.
நாடாளுமன்றத்தில் பாஜ அரசு கொண்டுவரப் போகும் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பை காட்டும் வகையில், தமிழ்நாட்டில் அனைவரும் நம்முடைய வீட்டில் கருப்பு கொடியை ஏற்றுவோம். கருப்பு சட்டத்தை எதிர்த்து நம் எதிர்ப்பின் அடையாளமாக, கருப்பு கொடியை ஏற்றுவோம் என அறிக்கை வெளியிட்டார். ஒன்றிய பாஜ அரசின் தொகுதி மறுவரையறை என்ற கருப்பு சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
நாமக்கல்லில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, நேற்று முன்தினம் இரவே முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். நேற்று காலை நாமக்கல் நல்லிபாளையத்தில் உள்ள திமுக அவைத்தலைவர் செல்லப்பன் வீட்டின் முன், சுமார் 20 அடி உயர கம்பத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்பு கொடி ஏற்றி வைத்து, ஒன்றிய பாஜ அரசின் தொகுதி மறுவரையறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்பு கலரில் சட்டை, பேண்ட் அணிந்திருந்தார்.
அப்போது முதல்வர் கூறுகையில், ‘தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்’ என்றார். உரிமைகளை மீட்க தமிழ்நாடு தொடர்ந்து போராடும், தமிழ்நாடு வெல்லும் என முதல்வர் மு.கஸ்டாலின் கோஷங்களை எழுப்பினார். இதனை கட்சியினர் திரும்ப கூறி, ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யவுள்ள தொகுதி மறுவரையறை என்ற சட்ட மசோதா நகலை முதல்வர் மு.க.ஸ்டாலின் எரித்தார்.
இதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பிரசாரத்தில் கருப்பு உடை அணிந்து சட்ட நகலை எதிர்த்து போராட்டம் நடத்தினார். தொகுதி மறுவரையறை சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் வீடுகளில் நேற்று கருப்பு கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.
* ‘தமிழ்நாடெங்கும் எதிர்ப்பு தீ பரவட்டும்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும். பாசிச பாஜவின் ஆணவம் வீழட்டும். அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது.
இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். ‘தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ’ எனக் கூறியுள்ளார்.
