3 மசோதாக்கள் மீது நாளை வாக்கெடுப்பு: சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்கள் மீதான விவாத்தில் நாளை வாக்கெடுப்பு நடக்கும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்களை ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், ‘பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக 2023ம் ஆண்டு ஒன்றிய அரசு புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்தது. அதற்கு திமுக ஆதரவு தெரிவித்தது. ஆனால், தற்போது ஒன்றிய அரசு கொண்டு வரும் மசோதாவிற்கு ஆதரவு இல்லை. இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே திமுக எதிர்க்கிறது. எங்கள் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், மசோதாவின் நகலை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். பெண்கள் இட ஒதுகீட்டை கொண்டு வர எப்போதும் ஆதரவு உண்டு. அந்த சட்டம் மட்டுமே போதும். புதியதாக எந்த ஒரு சட்டமும் தேவையில்லை. தொகுதி மறுவரையறை மசோதாவை ஏற்க முடியாது’ என்றார். காங்கிரஸ் எம்பி வேணுகோபாலின் பேச்சுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியதை தொடர்ந்து, மசோதாவை விவாதத்திற்கு எடுத்து கொள்ளலாமா என்பது குறித்து முடிவெடுக்க, சபாநாயகர் பகுதிவாரி வாக்கெடுப்பிற்கு உத்தரவிட்டார். இதையடுத்து நடத்தப்பட்ட பகுதிவாரி வாக்கெடுப்பில் மசோதா மீதான விவாதத்தை தொடங்க ஆதரவாக 207 பேரும், எதிராக 126 பேரும் வாக்களித்தனர். பகுதிவாரி வாக்கெடுப்பில் மக்களவையில் மொத்தம் 543 எம்.பிக்களில் 333 எம்.பிக்கள் மட்டுமே அவைக்கு வந்தனர். அவர்கள், பட்டன் மூலமாக வாக்களித்தனர். இதில் குழப்பம் ஏற்பட்டதால் வாக்குச்சீட்டு முறையில் மறுவாக்குப்பதிவு நடந்தது.

மசோதாக்களை அறிமுகம் செய்ய தேவையான எம்.பிக்கள் ஆதரவு கிடைத்ததையடுத்து, மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் மக்களவையில் மசோதா விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ‘இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீதும் 12 மணி நேரம் விவாதம் நடக்கும். நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு நடக்கும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

Related Stories: