தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பயிற்சி மையங்களில் 2,795 தபால் வாக்குகள் பதிவு!

 

தூத்துக்குடி: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் 1, 2, 3 ஆகியோருக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகள் 15.4.2026 அன்று நடைபெற்றன. இந்தப் பயிற்சி மையங்களில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்காக தபால் வாக்கு வசதி மையங்கள் அமைக்கப்பட்டு, வாக்குகள் பெறப்பட்டன. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு” மகாஜன் தெரிவித்துள்ள விவரத்தில்; தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாகப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

விளாத்திகுளம் தொகுதிக்கு பயிற்சி மையமாக குமாரகிரி சி.கே.டி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியும், தூத்துக்குடி தொகுதிக்கு காமராஜ் கல்லூரியும் ஒதுக்கப்பட்டிருந்தன. திருச்செந்தூர் தொகுதிக்கு ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு நாசரேத் மர்காசியஸ் கல்லூரியிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியும், கோவில்பட்டி தொகுதிக்கு நாடார் மேல்நிலைப்பள்ளியும் பயிற்சி மையங்களாக செயல்பட்டன. இந்த மையங்களில் முறையே விளாத்திகுளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கு தலா 3 வசதி மையங்களும், தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி தொகுதிகளுக்கு தலா 2 வசதி மையங்களும், திருச்செந்தூர் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு தலா ஒரு வசதி மையமும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த வசதி மையங்களில் 15.4.2026 அன்று பதிவான தபால் வாக்குகளின் அடிப்படையில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிகபட்சமாக 685 வாக்குகளும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 514 வாக்குகளும் பதிவாகியுள்ளன. விளாத்திகுளம் தொகுதியில் 487 வாக்குகளும், கோவில்பட்டி தொகுதியில் 462 வாக்குகளும், திருச்செந்தூர் தொகுதியில் 344 வாக்குகளும் பதிவாகின. தூத்துக்குடி தொகுதியில் மொத்தம் 303 வாக்குகள் பெறப்பட்டன. மாவட்டம் முழுவதும் உள்ள இந்த 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர்களிடமிருந்து 1,422 வாக்குகளும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களிடமிருந்து 1,373 வாக்குகளும் பெறப்பட்டன. ஒட்டுமொத்தமாக நேற்று ஒரே நாளில் பயிற்சி மையங்களில் 2,795 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: