எங்கிருந்தாலும் வாழ்க-எடப்பாடி: உலக அதிசயம்ப்பா இது-ஓபிஎஸ்

தேனி மாவட்ட தொகுதிகளின் அதிமுக, அமமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் ஆண்டிபட்டியில் டிடிவி.தினகரனோடு சேர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பேசுகையில், ‘‘இன்னொருத்தர் இருந்தாரு யாருனு தெரியும். இந்த மண்ணில் இருந்தவர். வேறு பக்கம் சென்றுவிட்டார். நான் அவரை பற்றி பேசவில்லை. எங்கிருந்தாலும் வாழ்க’’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து மறைமுகமாக பேசினார்.

இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக நாளை மறுநாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆண்டிபட்டிக்கு வருகை தர உள்ளார். இதற்காக ஆண்டிபட்டி அருகே கரிசல்பட்டி பகுதியில் பிரசார பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்பி தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆண்டிபட்டிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் எங்கிருந்தாலும் வாழ்க என கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘அப்படியா…’ என வியப்புத் தெரிவித்த அவர், ‘‘எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி கூறியது உலகத்தில் உள்ள அதிசயங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கிறேன்’’ என்றார்.

தேனி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேட்டபோது, ‘‘அதிமுகவில் ஓட்டை விழுந்து பல நாட்கள் ஆகிவிட்டது. அவரால் ஒன்றும் செய்ய முடியாது’’ என்றார். ஓபிஎஸ் இல்லாமல் அதிமுக முதல் முறை சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது குறித்து கேட்டபோது, ‘‘இதுகுறித்து நீங்கள் தான் கருத்துக்கணிப்பு சொல்ல வேண்டும், தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக பிரமாண்ட வெற்றி பெறும். தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்’’ என்றார்.

Related Stories: