கேரளாவில் தொடரும் மழை; சபரிமலை செல்ல பக்தர்களுக்கு தடை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவனந்தபுரம்: கேரளத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக பத்தனம் திட்டா, கோட்டயம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் சில அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மழையால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்றும் கேரளத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கண்ணூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் 48 மணிநேரத்திற்கு மேல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. எனவே இந்த மாவட்டத்தில் மலையோர பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பம்பை நதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பலத்த மழை காரணமாக நேற்றிரவு முதல் பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்கப்படவில்லை. நிலக்கல், எருமேலியில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மழை குறைந்தால் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இன்று மாநிலம் முழுவதும் உள்ள 14 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் தவிர ஏனைய 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: