புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ராமர் கோயில் அறக்கட்டளை நிதி முறைகேடு குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டு வருகின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் சூழ்நிலையில், அவையில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னைகள் மற்றும் ஆளும் தரப்புக்கு எதிரான வியூகங்களை வகுப்பது குறித்து எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் மஹுவா மொய்த்ரா, சாகரிகா கோஷ், சமாஜ்வாதி கட்சி எம்பி ராம்ஜிலால் சுமன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.டி.முகமது பஷீர் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடுகள் மற்றும் நன்கொடை திருட்டு பிரச்னை குறித்து அவசர விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அவை நடவடிக்கை ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தார். அதேபோல், காங்கிரஸ் எம்பி ரேணுகா சௌத்ரியும் அறக்கட்டளையின் நிதி வெளிப்படைத்தன்மை குறித்தும், தணிக்கை நடத்தக் கோரியும் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார். தொடர்ந்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற கட்டிடத்தின் நுழைவாயில் அருகில் திரண்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ‘அமித் ஷா நாடாளுமன்றத்தில் இருந்து மாயமானது ஏன்?’ என்ற பெரிய அளவிலான சுவரொட்டியை ஏந்தியபடி, ஒன்றிய அரசுக்கும் உள்துறை அமைச்சருக்கும் எதிராக தொடர் கோஷங்களை எழுப்பினர். மேலும், ராமர் கோயில் நன்கொடை முறைகேடு புகாரை முன்வைத்து அரசுக்கு எதிராக சுவரொட்டிகளையும் வாசக அட்டைகளையும் கைகளில் ஏந்தி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மக்களவை கூடியதும், கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு 8 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய பெண் வீராங்கனைகளுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்ததுடன், 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து கேள்வி நேரத்திற்காக முதல் கேள்வி பட்டியலிடப்பட்டபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் திடீரென கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கை மற்றும் ராமர் கோயில் நன்கொடை திருட்டு புகார்கள் குறித்து அவையில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டதால் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டடன. எதிர்க்கட்சிகளின் இந்த தொடர் முழக்கங்களைக் கண்டு அதிருப்தி அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‘அவை நடவடிக்கைகளை முடக்கும் நோக்கத்தோடுதான் எம்பிக்கள் அவைக்கு வருகிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார். இருப்பினும் அமளி அடங்காததால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
