மோடியின் பெயரை குறிப்பிடாமல் கருத்து; மரியாதையின்றி பேசுவது ஒன்றும் ‘கெத்து’ கிடையாது: ஒலிம்பிக் வீராங்கனையின் பதிவு வைரல்

புதுடெல்லி: தகாத வார்த்தைகளைப் பேசுவது கெத்து கிடையாது என்றும், மரியாதையாகப் பேசுவதே மனித ஆளுமையின் அடையாளம் என்றும் ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கர் தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது. இளைஞர்களின் போராட்டங்கள் குறித்த உரையாடலில், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது எந்தப் பிரச்னையையும் தீர்க்காது எனப் பிரதமர் மோடி சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாம் பேசும் வார்த்தைகள் தான் நமது ஆளுமையை வெளிப்படுத்துகின்றன.

கெட்ட வார்த்தைகளைப் பேசுவதும், தவறாகப் பேசுவது ஒன்றும் கெத்து கிடையாது. கடின உழைப்பு, இரக்கம், பிறரிடமும் சுயத்திடமும் மரியாதையுடன் நடப்பது, நேர்மையுடன் வெற்றி பெற்று பெற்றோருக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதுதான் உண்மையான கெத்து. கடந்த சில ஆண்டுகளில் கெட்ட வார்த்தைகள் பேசுவது சாதாரணமாகி, அதுவே கெத்து எனக் கருதப்படும் நிலை மாறியுள்ளது. மக்கள் தங்களது அன்றாட உரையாடல்களில் மரியாதையற்ற வார்த்தைகளை சாதாரணமாகப் பயன்படுத்துவது கவலையளிக்கிறது’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. இருப்பினும், தனது பதிவில் பிரதமர் மோடியின் பெயரையோ அல்லது இளைஞர்களின் போராட்டங்களையோ அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை.

மோடியை திட்டிய சிறுமி மீதான வழக்கை கைவிட்ட போலீஸ்;
டெல்லியில் போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி சீர்திருத்தங்களை வலியுறுத்தி, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ நடத்திய போராட்டத்தின் போது, சிறுமி (15) ஒருவர் பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அச்சிறுமி மன்னிப்பு கோரும் வீடியோவை வெளியிட்டார். மேலும், அச்சிறுமியின் தாயாரும் தனது மகளின் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யுமாறும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்குமாறும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். பிரதமரின் மன்னிப்பு மற்றும் சிறுமியின் வயதைக் கருத்தில் கொண்டு, அவர் மீதான வழக்கைக் கைவிடுவதாக டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர்.

Related Stories: