சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் நேற்று வெளியிட்ட அறிக்கை: நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வந்தே மாதரம் தொடர்பான மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அனைத்து மத நம்பிக்கைகள் உடையவர்கள் வாழும் நாட்டில் ஒரு மதத்தின் கடவுள்களை புகழ்ந்து பாடக்கூடிய ஒரு பாடலை தேசிய பாடலாக அங்கீகரிப்பதும் அதை மற்றவர்களை பாட சொல்வதும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு நேர் முரணானது.
விலைவாசி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிரச்னைகள் உள்ள நாட்டில் உணர்வுப்பூர்வமான விஷயங்களில் மக்களின் கவனத்தை குவிக்க செய்வது ஒன்றிய அரசின் பிரித்தாலும் சூழ்ச்சி. ஒன்றிய பாஜ அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்த சட்டத் திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தரக்கூடாது. சமீபத்தில் ராஜ்ய சபாவில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இலங்கை கடலோர காவல் படையால் சுமார் 1300க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மோடியின் ஆட்சியில் மீனவர்களுக்கு பாதுகாப்பு என்று பேசிய பாஜவினர் வாய்மூடி மவுனமாக உள்ளனர். 1300ல் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள் இன்னும் 30 பேர் விடுவிக்கப்படாமல் உள்ளனர். அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்ன என்பதை குறித்து எந்த கருத்தும் சொல்லப்படவில்லை. ஆகவே தமிழக மீனவர்களினுடைய நலனை காப்பதற்கு உருப்படியான நடவடிக்கைகளை ஒன்றிய அரசாங்கம் எடுக்க வேண்டும். இதை தமிழகத்தினுடைய அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
