கனமழையால் வேறு வழியின்றி கபினியில் 15,000 கனஅடி உபரிநீர் திறந்த கர்நாடகா: இன்று காலை பிலிகுண்டுலு வந்தடையும்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து, வேறு வழியின்றி கபினியில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று காலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களான தலைக்​கா​விரி, பாகமண்​டலா, மடிகேரி உள்​ளிட்ட பகு​தி​களில் தென்​மேற்​கு பரு​வ​மழை, கடந்த 2 மாதமாக வழக்கமான அளவு பெய்​ய​வில்​லை.

இதனால், காவிரி ஆற்​றின் குறுக்கே உள்ள கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி, ஹேமாவ​தி, ஹாரங்கி ஆகிய 4 அணை​களிலும் நீர்மட்டம் குறைவாக இருந்தது. இதனால், உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின்​படி கடந்த ஜூன், ஜூலை மாதங்​களில் தமிழகத்​துக்கு திறக்க வேண்​டிய நீரை, கர்​நாடக அரசு திறக்​க​வில்​லை. இது குறித்து தமிழக அரசு கடந்த 28ம் தேதி, காவிரி ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டத்​தில் முறை​யிட்​டதை அடுத்​து, 15 நாட்​களுக்கு தமிழகத்​துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்​து​ விட வேண்​டும் என ஒழுங்​காற்​றுக் குழு உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணை​யத்​தில், கர்​நாடக அரசு மேல்​முறையீடு செய்​தது. கர்​நாட​கா​வின் கோரிக்​கையை நிராகரித்த மேலாண்மை ஆணை​யம், தமிழகத்​துக்கு 15 நாட்​களுக்கு 3,500 கனஅடி நீரை திறந்​து ​விடு​மாறு உத்​தர​விட்​டது. ஆனாலும், தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு தெரிவித்தது. காவிரி நீர் பங்​கீட்டு விவ​காரத்​தில், தமிழகம்-கர்​நாடகா இடையே மோதல் முற்​றி வந்த நிலையில், கடந்த 31ம் தேதி முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகு​தி​களில் கனமழை பெய்து வருகிறது.

காவிரி உற்​பத்​தி​யாகும் தலைக்​கா​விரி​, கர்நாடக மாநிலம் வயநாட்டில், கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு தொடங்கி விடிய, விடிய பலத்த மழை கொட்​டியதால், ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது. மைசூரு மாவட்​டம், எச்​.டி.கோட்​டை​யில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து மளமளவென அதிகரித்தது. கடல் மட்​டத்​தில் இருந்து 2,284 அடி உயரத்​தில் உள்ள க‌பினி அணை​யின் நீர்​மட்​டம், நேற்று முன்தினம் பிற்​பகல் முழு கொள்ளளவை எட்டியது.

இதனால் அணை உடையாமல் இருக்கவும், மக்கள் வெள்ளத்தில் சிக்காமல் இருக்கவும் கபினி அணையில் இருந்து உபரி நீரை திறந்து விட கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த அணையில் இருந்து, நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இரவில் 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, கபினி அணைக்கு நீர்வரத்து 23,009 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 14,958 கனஅடியாக குறைக்கப்பட்டது.

கபினி அணையில் இருந்து உபரி நீர் திறக்​கப்​பட்​ட​தால், காவிரி ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. அதே போல், 124.80 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம், 95 அடியை தாண்டி உள்ளது. அணைக்கு நீர்வரத்து 22,055 கனஅடியாக உள்ளது. மேலும், ஹேமாவதி அணை நிரம்பிய நிலையில், அந்த அணையில் இருந்து 11,884 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

இந்த நீர் கேஆர்எஸ் அணைக்கு தான் செல்லும். ஹாரங்கி அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. கபினியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர், வழக்கமாக 24 மணி நேரத்திற்குள் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து சேரும். ஆனால், பல மாதங்களாக காவிரி ஆறு வறண்டு கிடப்பதால், மணல் பரப்பில் அதிகமாக நீர்உறிஞ்சப்பட்டு, குண்டுகுழிகளில் நிரம்பி வர தாமதமாகும். இதனால், இன்று காலை தான் ஒகேனக்கல் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* மேட்டூர் அணை நீர்மட்டம் 73.33 அடி
ஒகேனக்கல் காவிரியில் கடந்த 7 நாட்களாக நீர்வரத்து 150 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 600 கனஅடியாக அதிகரித்தது. ஆனால், நேற்று காலை 500 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணைக்கு, நேற்று முன்தினம் 42 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 47 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 73.49 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 73.33 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 35.63 டிஎம்சியாக உள்ளது.

* பில்லூர் அணை நிரம்பியது: பவானி ஆற்றில் வெள்ளம்
கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி.தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலங்களில் பில்லூர் அணை நான்கு முறை நிரம்பியது.

ஆனால், இந்த ஆண்டில் முதன்முறையாக பில்லூர் அணை முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அடைந்தது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக உள்ளதால், பாதுகாப்பு கருதி நான்கு மதகுகளின் வழியாக வினாடிக்கு 2060 கன அடி நீரும், மின் உற்பத்திக்காக 6 ஆயிரம் கன அடி நீரும் என 8060 கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: