மேகதாது அணை விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுடன் இணைந்து போராட தயாராக உள்ளேன்: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் 10 நாள் மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமின் விழாவில் கலந்து கொள்வதற்காக எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்தார். 2029 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் எப்படி தமிழ்நாட்டில் செயல்பட வேண்டும் என்பது குறித்து எல்லாம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

எங்களைப் பொறுத்தவரை தொகுதி மறுவரையறை என்பது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உடைய நிலைப்பாடும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிலைப்பாடும் தெளிவாக உள்ளது. தொகுதி மறுவரையறையை சாக்லேட் கவரில் போட்டு கொடுத்தாலும் சரி, அது தமிழ்நாட்டிற்கு எதிரானது. தமிழர்களுக்கு எதிரானது. தமிழ்நாடு குரலுக்கு எதிரானது என்ற நிலையில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத்தில் எப்படி இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் இணைந்து தோற்கடித்ததோ, அதேபோல் தற்போதும் தோற்கடிப்பதற்கான முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். இந்த மசோதாவுக்கு நான் உள்பட 13 தமிழக காங்கிரஸ் எம்பிக்களும் ஆதரவு தெரிவிக்க மாட்டோம். அது தமிழகத்திற்கு செய்யும் துரோகம். கடந்த முறை தொகுதி மறுவரையறைக்கு யாரெல்லாம் ஆதரவு கொடுத்தார்கள் என்று தெரியும்.

யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்றும் தெரியும். ஆதரவு தந்தவர்கள் பாமக, அதிமுக, பாஜ மூன்று கட்சிகளும் ஓட்டு போடுவோம் என்று சொன்ன புண்ணியவான்கள். இந்த மூன்று கட்சிகளை தவிர வேறு எந்த கட்சி சேர்கிறார்கள் என்று நீங்கள்தான் பார்க்க வேண்டும். ராகுல் காந்தி யார் தொகுதி மறுவரையறைக்கு வாக்களித்தார்களோ அவர்களை எட்டப்பர் என தெரிவித்தார். அன்புமணி ராமதாஸ், அதிமுக, பாஜ உள்ளிட்டோர் எட்டப்பர் வரிசையில் உள்ளனர். இந்த எட்டப்பர் வரிசையில் யாராவது சேருகிறாரார்களா என்பது மசோதா வந்த பிறகு தெரிந்துவிடும்.

டி.கே.சிவகுமார் கர்நாடகாவுக்கு மட்டும்தான் பேசுவார். என்னை பொறுத்தவரைக்கும் தமிழ்நாடு தான் முக்கியம். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வேண்டும், எப்படியாவது முதல்வர்கள் பேச வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைவரும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஏன் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் மேகதாது விவகாரத்தில் ஒற்றுமையாக இல்லாதது வேதனையளிக்கிறது. தமிழகத்திலும் அனைவரும் இணைந்து போராட வேண்டும். நான் நயினார் நாகேந்திரனுடன் இணைந்து போராடுவதற்கும் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: