உங்களை ஒரு பைத்தியக்காரனும் நம்ப மாட்டான்; விஜயபாஸ்கர்கள் மீது மாஜி அமைச்சர் பாய்ச்சல்: இடைத்தேர்தல் கேட்டு துடிப்பது ஏன் என கேள்வி

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார், நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: விராலிமலை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் இருவரும் நீதிமன்றத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இவர்கள் கடந்த தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். இரவு பகல் பாராது, ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி தொண்டர்கள் உழைத்தனர். என்ன காரணத்திற்காக இவர்கள் ராஜினாமா செய்தார்கள்?

மக்கள் பணி செய்ய முடியாத அளவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டதா? எந்த மக்கள் பிரச்னைக்காக, மக்களின் உரிமை காக்க ராஜினாமா செய்தோம் என்று இவர்கள் விளக்கம் சொல்ல முன் வருவார்களா? உங்களுக்கு எதற்கு அமைச்சர் பதவி கொடுத்தார்கள்? நீங்கள் மாடமாளிகை, கல்லூரிகள் கட்டிக் கொள்ளவா? சாலை ஒப்பந்தங்களை எடுத்து குபேரனாக வாழ்வதற்காகவா? மக்களுக்கு சேவை செய்யவும், அதிமுகவிற்கு துணை நிற்கவும்தானே?

பதவி சுகத்தை, அதிகாரத்தை அனுபவித்து, அதிமுகவை காட்டிக் கொடுத்துவிட்டு எட்டப்பர்களாக நீங்கள் அங்கே போயிருக்கிறீர்கள். இன்றைக்கு உடனடியாக தேர்தல் வேண்டுமாம். என்ன அவசரம் உங்களுக்கு? அங்கே போய் எம்எல்ஏ, அமைச்சராகி விஜய்க்கு முக்காடு போட நீங்கள் தயாராகி விட்டீர்கள். நீங்கள் தங்கத்தை உருக்கி, வைரத்தை, மாணிக்கக் கற்களை பதித்து விஜய்க்கு கிரீடமாக சூட்டினாலும் உங்களை ஒரு பைத்தியக்காரனும் நம்ப மாட்டான்.

இவ்வளவு உயரத்தில் வைத்த அதிமுகவையே காலிலே தூக்கிப் போட்ட உங்களுக்கு விஜய்யை தூக்கிப்போட எவ்வளவு நேரமாகும்? வழக்கு போட வெட்கமில்லை, மானமில்லை, ரோஷமில்லை. உப்புப் போட்டு சாப்பிடுறீங்களா, இல்லையா? இரு விஜயபாஸ்கர்களுக்கும் தக்க பாடத்தை நிச்சயம் மக்கள் புரிய வைப்பார்கள். இவ்வாறு பேசியுள்ளார்.

Related Stories: