நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

சென்னை: நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி காவல்துறையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் போரட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திலும் மாணவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், காவல்துறை அவர்களைப் போராடவிடாமல் குண்டுக்கட்டாக கைது செய்தது. சில இடங்களில் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக கல்லூரி வளாகங்களுக்குள் சென்று மாணவர்களை கைது செய்ய முயற்சித்தது தமிழக காவல்துறை. மேலும், மாணவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. தமிழக அரசின் இந்தச் செயல் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.

நீட் தேர்வை எதிர்ப்பதாக சொல்லும் தவெக அரசு, நீட்டுக்கு எதிராகப் போராடும் மாணவர்களை கைது செய்வது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், சாலைகள் போராடுவதற்கானவை அல்ல என்று சொன்னது கடும் கண்டனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்’’ எனக் கூறியுள்ளார்.

Related Stories: