சமையல் சிலிண்டர் வெடித்து உடல் கருகிய 3 பேர் உயிரிழப்பு: தஞ்சாவூர் அருகே பரிதாபம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே சின்னஅம்மன்குடி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் முருகையன் (51). விவசாயி. இவரது மனைவி செல்வி (41), இவர்களது மகள் அபிநயா (15). கடந்த 30ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு முருகையன் வீட்டின் முன்பகுதியில் இருந்த கீற்று கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்கும் போது கீற்றுக்கொட்டகையில் சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.

இதில் செல்வி, அபிநயா, அப்பகுதியை சேர்ந்த காசிநாதன்(37), ராஜசேகர்(45), பழனிவேல்(40), வேம்பையன்(47), கலையரசி (38), செல்வராஜ்(70), காளியம்மாள் (70), ரமேஷ் மகன் புவனேஸ்வரன் (15) ஆகிய 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதில் செல்வி, அபிநயா, பழனிவேல், காசிநாதன், ராஜசேகர், வேம்பையன், கலையரசி ஆகிய 7 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலும், லேசான காயம் அடைந்த 3 பேர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பழனிவேல் நேற்றுமுன்தினம் நள்ளிரவிலும், காசிநாதன், வேம்பையன் நேற்று காலையிலும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: