மதுரை: ஜனநாயகன் பேனர் விழுந்து அரசு பஸ் கண்ணாடி நொறுங்கியது. இதைப் பார்த்த பயணிகள் அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தானில் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை வாழ்த்தி, தவெக கட்சியினர் அதிக எண்ணிக்கையில் பேனர்களை வைத்திருந்தனர். நேற்று மாலை மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து சோழவந்தான் வழியாக மேலநாச்சிகுளத்திற்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டபோது, அப்பகுதி ரயில்வே பாலத்தின் சுவரில் தவெக நிர்வாகிகளால் வைக்கப்பட்டிருந்த பெரிய பேனர் திடீரென அரசு பஸ் மீது விழுந்தது.
இதில் பேனரில் இருந்த இரும்பு ஆங்கில்கள் குத்தியதால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அலறினர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர். இது குறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜூலை 23ல் வெளியானது. அதற்காக வாழ்த்தி வைக்கப்பட்ட பேனர்கள் நகர் முழுவதும் அகற்றப்படவில்லை. உடனடியாக அகற்றாததால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. எனவே, இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
